Social Icons

ஐ ஹேட் யூ, பட்.. 4



 




அத்தியாயம் 10

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!

அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.

ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!

வீட்டிலும் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே அலைந்தாள். டிவி, ஆவி, ஜூவி எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு டிஸ்டன்ஸில் வைத்தாள். 'நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!' எனும் தனது கோட்பாட்டை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டாள். இப்போதைய தனது குறிக்கோள், தேவையான விஷயங்களில் தெளிவான அறிவு பெறுவதுதான் என்பதை நன்கே உணர்ந்திருந்தாள். மகளுடைய இந்த மாற்றத்தை வரதராஜன் வியப்பாக பார்த்தார். கண்விழித்து படிக்கிற மகளுக்கு காபி ஆற்றியவாறே வந்தவர், அவள் அமர்ந்திருந்த டேபிள் மீது விரிந்து கிடந்த மூன்று தடி தடி புத்தகங்களை பார்த்து மலைத்துப் போனார். மூன்று புத்தகங்களிலும் மாறி மாறி பார்வையை வீசுகிற மகளை பிரமிப்பாகவும், சற்றே கவலையாகவும் பார்த்தார்.

"என்னம்மா இது.. ஒரே நேரத்துல மூணு புத்தகத்தை வச்சு படிச்சுட்டு இருக்குற..??"

"ஆமாம் டாடி.. இதுல இருக்குறது அதுல இருக்காது.. அதுல இருக்குறது இதுல இருக்காது..!! ஆனா நம்ம மண்டைக்குள்ள மட்டும்.. எல்லாம் இருக்கணும்..!!" ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

"ஹ்ம்ம்.. இப்போலாம் டெயிலி இப்படி விழுந்து விழுந்து படிக்க ஆரம்பிச்சுட்ட..??"

"ஏன் டாடி.. படிக்க கூடாதா..??"

"இல்லம்மா.. காலேஜ் எக்ஸாம்க்கு கூட நீ இப்படி கண்ணு முழிச்சுலாம் படிச்சது இல்லையேன்னு கேட்டேன்..??"

மகள் மீது இருக்கும் அன்பில் வரதராஜன் சீரியசாக கேட்க, ப்ரியாவோ அந்த வாய்ப்பை கூட ஸீன் போட உபயோகித்துக் கொண்டாள்.

"ஹையோ.. காலேஜ் எக்ஸாமும் இதுவும் ஒன்னா டாடி ..?? டெக் லீட் பொசிஷன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எத்தனை மீட்டிங் அட்டன்ட் பண்ணனும் தெரியுமா.. எத்தனை பேரை சமாளிக்கணும் தெரியுமா..?? எக்யுப்டா இருக்கணும் டாடி.. இல்லனா ஏமாத்திருவாங்க..!!"

"எகுப்னா..??" வரதாராஜன் தலையை சொறிந்தார்.

"ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஆயத்தமா இருக்கணும்னு அர்த்தம்..!! போருக்கு போறதுக்கு முன்னாடி.. இந்த கத்தியை நல்லா தீட்டிட்டு போறாங்கல்ல.. அந்த மாதிரி..!!"

"ஓ..!!!!"

"ப்ச்.. உங்களுக்கு இதுலாம் புரியாது.. காபியை குடுத்துட்டு நீங்க போய் தூங்குங்க.. நான் கொஞ்ச நேரம் படிச்சுட்டு படுத்துக்குறேன்..!!"

சலிப்பாக சொல்லியவாறே அவர் கையிலிருக்கும் காபியை ப்ரியா பிடுங்கிக்கொண்டு அவரை விரட்டினாள். எத்தனையோ பேரை சமாளிக்கவேண்டும் என்று ப்ரியா அப்பாவிடம் சொன்னாலும், அவளுடைய எய்ம் எல்லாம் ஒருவனை சமாளிப்பதில்தான் இருந்தது. அசோக்..!!!!

அவன் அன்று ப்ரியாவிடம் விட்ட சவாலின் பிறகு, இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோதிக் கொண்டார்கள். அவர்கள் கைகோர்த்து ஒன்றாக சுற்றித்திரிந்தபோது, அவர்களுடைய மனதுக்குள் தூங்கிய குழந்தைத்தனமான குணங்கள், இப்போது வெளியே குதித்து எதிரும் புதிருமாக சண்டையிட்டன. அற்பத்தனமாய்.. முதிர்வில்லா பிள்ளைகளாய் முட்டிக் கொள்வார்கள்..!!

கேஃப்டீரியாவில் மதிய உணவு அருந்துகையில் ஒரு நாள்..

டீமில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு மீட்டிங் முடித்துவிட்டு ப்ரியா சற்று தாமதமாகத்தான் வந்தாள். அவள் அவசரமாக வருவதையே அசோக் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் ஆவி பறக்கிற நூடுல்ஸ் தட்டுடன் வந்த ப்ரியா, அந்த டேபிளில் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கை நோக்கி சென்றாள். பின்புறத்தை தடவிக் கொண்டிருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டு அவள் உட்கார முனைய, அசோக் அந்த தருணத்துக்காகத்தான் காத்திருந்தவன் போல, தனது வலது காலை நீட்டி அந்த சேரில் வைத்து, ப்ரியாவை அமரவிடாமல் செய்தான். அவள் இப்போது வெடுக்கென திரும்பி கடுப்புடன் இவனை முறைத்தாள். இவனோ கூலாக..

"ஒய்.. என்ன முறைக்கிற..??" என்று போலிக்கோபம் காட்டினான்.

"காலை எடுடா..!!" ப்ரியாவின் குரலில் உடனடியாகவே ஒரு உஷ்ணம்.

"முடியாது..!! இதெல்லாம் டெவலப்பர்ஸ் க்ரூப்.. டெக்லீட்க்குலாம் இங்க சீட் இல்ல.. வேற எங்கயாவது ஓடிப்போ..!!"

"நான் எதுக்கு வேற எங்கயும் போகணும்..?? டெக்லீட் ஆனா என்ன.. டெலிவரி மேனேஜர் ஆனா என்ன..?? நான் எப்போவும் இந்த க்ரூப்ல ஒருத்திதான்..!!"

"ஹாஹா.. நீயா அப்படி சொல்லிக்கிறதா..?? நீ இந்த க்ரூப்ல இருக்கியா இல்லையான்னு நாங்க சொல்லணும்..!! உன் க்ரூப் எது தெரியுமா..? ஆங்.. அங்க பாரு.. தனியா உக்காந்து சாப்புட்டு இருக்காரு.. பாலா..!! அவர்தான் உன் க்ரூப்.. போ.. அவர்கூட போய் ஜாயின் பண்ணிக்கோ.. அப்படியே கம்பனி குடுக்குறேன்ற சாக்குல அவரை நல்லா காக்கா புடி.. அடுத்த ப்ரோமோஷனுக்கு ரொம்ப யூஸ் ஆகும்..!!"

அசோக் கேலியாக சொல்ல, ப்ரியா கண்களை இடுக்கி அவனை முறைத்தாள். அசோக் அந்த மாதிரி ப்ரியாவை சீண்டுவது அடுத்தவர்களுக்கும் எரிச்சலை உண்டாக்கியது. அனைவரும் ப்ரியாவுக்கு சப்போர்ட் செய்தார்கள். 'ஏய்.. ஏண்டா இப்படி பண்ணுற.. அவளை உக்கார விடுடா..' என்று ஆளாளுக்கு அசோக்கிடம் சலிப்பாக சொன்னார்கள். கோவிந்த் கூட 'பாஸ்.. பா..பாவம் பாஸ்.. காலை எடுங்க ப்ளீஸ்..' என்று கெஞ்சினான். அசோக்கோ 'ப்ச்.. சும்மா இருங்க எல்லாம்.. அவ ஏதோ பாசக்காரி மாதிரி நடிக்கிறா.. நீங்களும் அதை நம்பிக்கிட்டு..' என்று காலை எடுக்க மறுத்தான்.

"இப்போ காலை எடுக்கப் போறியா.. இல்லையா..??" ப்ரியா பற்களை கடித்தவாறு இப்போது பொறுமை இல்லாமல் கேட்க,

"முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக் எகத்தாளமாக கேட்டான்.

ப்ரியா ஒரு சில வினாடிகள் அசோக்கை எரித்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் கையிலிருந்த நூடுல்சில் செருகியிருந்த ஃபோர்க்கை பிடுங்கி, அசோக்கின் தொடையில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். அசோக் உடனே 'ஆஆஆஆஆ...!!' என அலறிக்கொண்டு சேர் மீதிருந்த காலை அவசரமாக எடுத்தான். அந்த கேப்பில் ப்ரியா அந்த சேரில் அமர்ந்து கொண்டாள். அசோக் தொடையை தடவியவாறு 'ஷ்ஷ்ஷ்ஷ்...' என்று வலியில் துடிக்க, அனைவரும் அவனை பார்த்து வாயில் உணவுடன் சிரித்தனர். ப்ரியா அவசர அவசரமாக நூடுல்ஸ் அள்ளி வாய்க்குள் போட்டு குதப்பிக்கொண்டே அசோக்கை பார்த்து சொன்னாள்.

"நா இங்க்தா உக்காந் சாப்புவேன்.. நீ வேணா எங்கா போ..!!"

"ஆஆஆஆ.. ரத்தம் வருதுடி.. ராட்சசி..!!"

"வதத்தும் வதத்தும்.. நல்லா வதத்தும்..!!" நூடுல்சை அசை போட்டவாறே ப்ரியா சொன்னாள்.

"பேய்.. பிசாசு.. காட்டேரி..!!"

அப்புறம் அன்று சாப்பிட்டு முடிக்கும் வரை அசோக் அவளை திட்டிக்கொண்டே இருந்தான். அவன் இந்த மாதிரியெல்லாம் ப்ரியாவை சீண்ட சீண்ட, அவள் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டே இருந்தாள். அந்த பொறுமலை அடக்க முடியாமல் ஒருநாள்..

'வேலை எப்படிடி போகுது ப்ரியா..?' என்று நண்பி ஒருத்தி அவளுடைய ஃபேஸ்புக் முகப்பு சுவற்றில் கிறுக்கி வைக்க.. 'ஒரு ஈகோ புடிச்ச பய இம்சை பண்ணிட்டே இருக்காண்டி.. அவனுக்கு வைக்கிறேன் பாரு ஆப்பு..!!' என்று இவளும் பதிலுக்கு கிறுக்கி வைத்துவிட்டாள்..!! ப்ரியாவுடைய நடவடிக்களை நோட்டமிட்டுக்கொண்டே இருக்கும் அசோக்கிற்கு, அடுத்த நாளே அந்த கிறுக்கல் கண்களில் பட்டுவிட்டது. டென்ஷன் ஆகிப் போனான்.

"என்னைத்தான ஈகோ புடிச்ச பயன்னு சொல்லிருக்குற..??" என்று ப்ரியாவிடம் சென்று எகிறினான்.

"உ..உன்னலாம் ஒன்னும் சொல்லல.. உ..உலகத்துல நீ ஒருத்தன்தான் ஈகோ புடிச்ச பயலா..?? நான் நம்ம QA மேனேஜரை சொன்னேன்..!! போ.. போ.. போய் வேலையை பாரு போ.." என்று திருதிருவென விழித்தவாறு ப்ரியா சமாளித்தாள்.

அன்று இரவு அசோக்கின் வீட்டில்.. டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த செல்வி.. ஹீரோயினின் கணவனை 'சாப்பாட்டுல போய் கோவத்தை காட்டுறானே.. சரியான ஈகோ புடிச்ச பய..!!' என்று திட்டிவிட.. 'இப்போ என்னைத்தான சொன்னீங்க.. என்னைத்தான சொன்னீங்க..?' என்று ஆக்ரோஷமாக கத்தியவாறே, சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் அண்ணியிடம் சண்டைக்கு பாய்ந்தான்..!! புருஷனிடம் அறை வாங்கிவிட்டு கேமராவை பார்க்கும் அந்த ஹீரோயின் போலவே, செல்வி மிரண்டு போய் இவனை பார்த்தாள்..!!

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை.. ப்ரியா தனது கல்லூரித்தோழி ஒருத்தியுடன் ஃபோரம் மால் சென்றிருந்தாள். PVR சினிமாஸில் டிக்கெட் வாங்குவதற்கு அந்த தோழி வரிசையில் நின்றிருக்க.. இவள் வெறுமனே கையைக்கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தூரத்தில் ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்ருந்த அசோக் இவளுடைய கண்ணில் பட்டான். அவனை பார்த்ததும் பரவசமாகிப் போன ப்ரியா, அவசரமாக நடந்து சென்று அவனை நெருங்கினாள்.

"ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?"

என்று பற்களை காட்டி இளித்தவாறே அவனது பக்கத்தில் சென்றதும்தான்.. அவனுடைய பனியனில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம்.. பளிச்சென அவளுடைய கண்களை தாக்கியது..!!

"MY BOSS IS A STUPID..!!"

அதை வாசித்ததுமே ப்ரியா வாயை 'ஓ'வென திறந்து திகைத்தாள். சுர்ரென கோவம் வந்தது அவளுக்கு. அவளுடைய குளிர் நிலா முகம், இப்போது அனல் நெருப்பை அள்ளி வீசியது. அகோரமாய் மாறிப்போயிருந்தது. 'இந்த மாதிரி ஒரு டி-ஷர்ட்டை போட்டுக்கொண்டு ஊர் சுற்றி, மறைமுகமாக என்னை கேவலப் படுத்துகிறானா இவன்..??'. ஆசையுடன் அவனை நெருங்கியவள், இப்போது ஆத்திரமாக சீறினாள்.

"ஏண்டா.. நான் ஸ்டுபிடா..?? நான் ஸ்டுபிடா..??"

அவனுடைய டி-ஷர்ட்டை கொத்தாகப் பற்றி கத்தினாள். அசோக் ப்ரியா மாதிரி சமாளிக்கவெல்லாம் முயற்சி செய்யவில்லை. அலட்சியமான குரலில் நேரடியாகவே பதில் சொன்னான்.

"தெளிவாத்தான எழுதிருக்கு.. என் பாஸ் ஒரு ஸ்டுபிட்னு..!! நீ என் பாஸ்தான..??"

"யூ.. யூ..." என்று ப்ரியா அவனை திட்ட வார்த்தை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கையிலேயே..

"ஹேய்.. காட் த டிக்கெட்ஸ்யா.. சலோ..!!" என்றவாறு அந்த தோழி இவர்களை நெருங்கினாள். நெருங்கியவள் அசோக்கை பார்த்து குழப்பமாகி..

"இ..இது யாரு..??" என்று ப்ரியாவை கேட்டாள்.

"எ..என் கூட வொ..வொர்க் பண்றவரு..!!" வெறுப்பாகவும், தடுமாற்றமாகவும் சொன்னாள் ப்ரியா. உடனே அசோக் பல்லிளித்துக் கொண்டே ஆரம்பித்தான்.

"இப்படி மொட்டையா சொன்னா எப்படி..?? இவங்க லீடா இருக்குற டீம்ல நான் ஒரு ப்ரோக்ராமர்.. ஆபீஸ்ல இவங்கதான் என் பாஸ்..!!"

என்று குறும்புடன் சொன்னவாறே, தனது நெஞ்சை விரித்து காட்டி.. அதில் எழுதியிருந்த வாசகத்தை ப்ரியாவின் தோழிக்கு தெளிவாக காட்டினான்..!! அவனுடைய குறும்பு புரியாமல் ஓரிரு வினாடிகள் குழம்பிய அவள், அப்புறம் அந்த வாசகத்தை வாசித்ததும் குபுக்கென எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள். தோழியின் சிரிப்பு ப்ரியாவுக்கு மேலும் எரிச்சலை கிளப்பியது. கண்களை இடுக்கி.. காதுகளில் புகை வர.. அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்..!!

அன்று படம் பார்த்துவிட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்புகையில்.. சென்ட் ஜான்ஸ் சிக்னலில் காத்திருக்கையில்.. யாரோ யாரையோ ஸ்டுபிட் என்று அழைக்க.. இவள் ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டுவிட்டு.. அப்படியும் இப்படியுமாய் அரக்க பரக்க திரும்பி பார்த்தாள்..!! 'ஹேய்.. சிக்னல் விழுந்துடுச்சுடி..' என்று பின்னால் இருந்தவள் முதுகில் குத்தியதுந்தான், சிந்தனை திரும்பியவளாய் ஆக்சிலரேட்டரை முறுக்கினாள்..!!

அஃபிஷியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இந்த மாதிரி மாறி மாறி சீண்டிக் கொண்டார்கள் என்றால்.. அஃபிஷியலான விஷயங்களில் நேரடியாகவே மோதிக் கொண்டார்கள்..!! தன்னுடைய பலவீனத்தை அசோக் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் என்பதை, ப்ரியா நன்றாக புரிந்து வைத்திருந்தாள். அசோக்கை சமாளிக்க அவனிடம் என்ன பலவீனம் இருக்கிறது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. தனது பலம்தான் அவனது பலவீனம் என்பதை உணர்ந்து கொண்டாள். அவனுக்கு அவள் பாஸ் என்பதுதான் அவளுடைய பலம். அவனை சமாளிக்க அந்த பலத்தையே உபயோகிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

இருக்கிற வேலைகளை டீமில் எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது.. அந்த வேலையில் உள்ள டெக்னிக்கல் சிக்கல்களை டீமில் இருப்பவர்கள் எடுத்து வந்தால் அதை தீர்த்து வைப்பது.. மதிப்பிட்ட நேரத்தில் அந்த வேலைகளை அவர்களிடமிருந்து முடித்து வாங்குவது.. இவைதான் ப்ரியாவின் மூன்றுவிதமான பிரதான வேலைகள்..!! இந்த மூன்றுவிதமான வேலைகளிலுமே அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் பிரச்னை வரும்.. மூன்று விதமாக முட்டிக் கொள்வார்கள்..!!

தனக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலையில் அசோக்கிற்கு திருப்தி இருக்காது. தனது திறமைக்கு சவாலான வேலையாக இல்லை என்ற உணர்வு எழும். எரிச்சலாகிப் போவான். எழுந்து ப்ரியாவின் அறைக்குள் சென்று அவளுடன் சண்டை பிடிப்பான்.

"என்ன வொர்க் அலாட் பண்ணிருக்குற நீ..??" என்று உள்ளே நுழைந்ததுமே எரிந்து விழுந்தான்.

"ஏன்.. என்னாச்சு..??" ப்ரியாவும் முறைப்பாக கேட்டாள்.

"கவிதாவுக்கு போய் காப்ளிகேட்டடான இஷ்யூ அசைன் பண்ணிருக்குற.. எனக்கு ஒரு சப்பை இஷ்யூ..!! இதை பண்றதுக்கு நான் வேணுமா.. புதுசா ஜாயின் பண்ணிருக்குற ஃப்ரஷருக்கு குடுக்க வேண்டிய வேலைலாம் எனக்கு குடுத்திருக்குற..?? யாருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு கூட உனக்கு தெரியல.. இதான் நீ டீமை லீட் பண்ற லட்சணமா..??" அசோக் அவ்வாறு அவளது திறமையை கேலி செய்யவும், ப்ரியாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. சீற்றமாக சொன்னாள்.



"இங்க பாரு.. யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!"

"என் பிரச்னையை நான் சொல்லாம வேற யார் சொல்வா..??"

"என்ன உன் பிரச்னை..??"

"எனக்கு இந்த வேலையை செய்யப் புடிக்கல..!!"

"ஏன்..??"

"ஏன்னா..?? என்னை மோட்டிவேட் பண்ற மாதிரி இல்ல.. ஒரே மொக்கையா இருக்குது..!!"

"அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.. உனக்கு சேலஞ்சிங்கா இருக்கணுன்றதுக்காக, நானா புதுசா புதுசா வேலைலாம் கிரியேட் பண்ணி தர முடியாது.. இருக்குற வேலைல ஒன்னைத்தான் தர முடியும்..!! குடுத்த வேலையை பாரு.. போ..!!"

"ஓஹோ..?? அப்போ நீ என்ன செய்ய சொன்னாலும்.. நாங்க அதை அப்படியே செய்யணும்..!! எதுவும் கேள்வியே கேட்கக் கூடாது.. அப்படியா..?? நாங்க என்ன உனக்கு அடிமையா..??"

"இப்போ என்ன உன்னை அடிமையா ட்ரீட் பண்ணிட்டாங்க.. குடுக்குற சம்பளத்துக்கு வேலை பாக்க சொல்றாங்க.. அவ்வளவுதான்.. போய் வேலையை பாரு போ..!! தேவை இல்லாம வந்து பிரச்னை பண்ணிட்டு இருக்காத..!!" ப்ரியா சலிப்பாக சொல்ல,

"ப்ச்.. நான் என்ன இப்போ தேவை இல்லாம பிரச்னை பண்றேன்..??" அசோக் பிரச்னையை அத்துடன் விட மறுத்தான்.

"ஆமாம்..!! உனக்கு நான் லீட் ஆனது புடிக்கல.. அதான் தேவை இல்லாம இப்படிலாம் பிரச்னை பண்ணிட்டு இருக்குற..!! ரவி இருக்குறப்போ என்னைக்காவது இந்த மாதிரிலாம் பிரச்னை பண்ணிருக்கியா நீ..??"

"ஆமாம்.. பண்ணினது இல்லதான்.. அவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தது.. யாராருக்கு எந்த வேலையை குடுக்கனும்னு..!! அதான் அவன்கிட்ட எதுவும் பிரச்னை பண்ணினது இல்ல..!!" அசோக்கின் வார்த்தைகள் ப்ரியாவை இப்போது உச்சபட்ச கோவத்திற்கு இட்டு சென்றன.

"மைன்ட் யுவர் டங் அசோக்.. யு ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்..!!" என்றாள் கோவத்தை அடக்கிக்கொண்டு.

"நான் எதையும் க்ராஸ் பண்ணல.. உள்ளததைத்தான் சொன்னேன்..!!"

"உள்ளதை சொல்றேன்னு நீ உளர்றதலாம் கேட்டுட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல.. உனக்கு ஏதாவது சொல்லனும்னா.. நேரா போய் பாலாட்ட சொல்லு..!!"

"ஹாஹா.. அந்த ஆள்ட்ட போய் என்னத்த சொல்றது.. அவரைத்தான் நீ நல்லா கைக்குள்ள போட்டு வச்சிருக்கியே.. அதனாலத்தான இந்த ஆட்டம் ஆடுற..??" அசோக்கின் கேலி, ப்ரியாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது.

"ஆமாண்டா.. அப்படித்தான் வச்சுக்கோயேன்.. அவரை நான் கைக்குள்ள போட்டு வச்சிருக்கேன்.. நான் நெனச்சா என்ன வேணா பண்ணுவேன்.. நாளைக்கே உன்னை டீம்ல இருந்து கூட தூக்குவேன்.. போதுமா..?? மூடிட்டு போய் வேலையை பாரு.. போ..!!" என்று ஆத்திரமாக கத்தினாள். அவள் நினைத்ததை விட அதிகமாகவே அந்த வார்த்தைகள் அசோக்கை காயப்படுத்தின.

"கொழுப்புடி உனக்கு..!! நீ என்னை டீம்ல இருந்து தூக்குறியா..?? உன்னை இந்த கம்பனியை விட்டே நான் தூக்குறனா இல்லையான்னு பாரு..!!"

அசோக் அந்த மாதிரி சூடாக சவால் விட்டுக் கொண்டிருக்கையில்தான் அவன் கண்களில் எதேச்சையாக அது தென்பட்டது..!! ப்ரியாவுடைய டேபிளின் ஒரு ஓரத்தில்.. மரத்தாலான சிறு மேடை மீது.. மலர்களால் சூழப்பட்ட ஒருவித அலங்காரத்துடன்.. கற்கள் பதித்த உட்புறம் ஜொலிஜொலிக்க.. கம்பீரமாய் வீற்றிருந்தது அந்த வாட்ச்..!! ஆன்சைட்டில் இருந்து திரும்பிய ப்ரியா அசோக்கிற்கு ஆசையாக வாங்கி வந்த வாட்ச்..!! அவள் மீதிருந்த எரிச்சலில் அசோக் அலட்சியப்படுத்திய அதே வாட்ச்..!!

அதை அவளுடைய டேபிளில் அலங்காரத்துடன் பார்த்த அசோக் ஒருகணம் தடுமாறிப் போனான். அத்தனை நேரம் அவனிடம் இருந்த கோவம் எல்லாம், இப்போது உடனே வற்றிப் போனது. ஒரு சில வினாடிகள் அந்த வாட்சையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். 'இதை ஏன் இங்கு கொண்டுவந்து வைத்திருக்கிறாள்..?? அதுவும் இத்தனை அலங்காரம் எல்லாம் செய்து..??'. அவனுடைய பார்வை சென்ற இடத்தை கவனித்த ப்ரியாவும், அந்த வாட்சை பார்த்தாள். அதை பார்த்ததும் இப்போது அவளும் அப்படியே ஆத்திரம் தீர்ந்து அடங்கிப் போனாள்.

அசோக் திரும்பி ப்ரியாவின் முகத்தை பார்க்க, அவனது பார்வையில் அவள் சற்றே தடுமாறிப்போய் தனது தலையை மெல்ல கவிழ்த்துக் கொண்டாள். இருவரும் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். அசோக்தான் அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தவாறே, மெல்லிய குரலில் ப்ரியாவிடம் கேட்டான்.

"இ..இதை எதுக்கு இங்க கொண்டுவந்து வச்சிருக்குற..??"

"ஏன்.. வ..வச்சிருந்தா என்ன..??"

"நான்தான் அன்னைக்கே இதை உன் தம்பிட்ட குடுக்க சொன்னேன்ல..??"

அசோக் ஒருமாதிரி இதமான குரலில் கேட்க, ப்ரியா சற்றுமுன் சீற்றமாய் சொன்ன அதே வார்த்தைகளை, இப்போது வேறொரு தொனியில், குரல் லேசாக தழதழக்க சொன்னாள்.

"யாருக்கு எதை குடுக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு சொல்லத் தேவை இல்ல..!!"

"எ..எனக்குத்தான் பிடிக்கலைன்னு.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ப்ரியா அவனை இடைமறித்து,

"தெரியும்..!! ஆனா.. அது உனக்காக வாங்கினது.. உனக்கு சொந்தமானது.. வேற யாருக்கும் குடுக்க எனக்கு இஷ்டம் இல்ல..!! அது இங்கதான் இருக்கும்.. உனக்கு எப்போ அதை புடிக்குதோ.. அப்போ வந்து எடுத்துக்கோ..!!"

என்று பார்வையை எங்கோ திருப்பிக்கொண்டு சொன்னாள். அசோக் சில வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். அப்புறம் மெல்ல திரும்பி நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினான். கண்களில் பொங்கும் நீருடனும், நெஞ்சில் பொங்கும் காதலுடனும் அவன் போவதையே ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வானத்து நிலவை மேகமூட்டம் சூழ்ந்தது மாதிரிதான் அவர்களது காதல் மனதை ஈகோமூட்டம் சூழ்ந்திருந்தது..!! கார்மேகத்தின் பிடியில் இருந்து தப்பி, அந்த பால்நிலா அவ்வப்போது தலைக்காட்ட தவறவில்லை..!! அவர்களுக்குள் நிறைந்திருந்த காதல் அவ்வப்போது இந்தமாதிரி வெளியே கிளம்புவதால்தான் எத்தனை சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்களால் ஓரிரு நாட்களில் சகஜமாக முடிந்தது..!! ஆனால் சகஜமான சிறிது நேரத்திலேயே அடுத்த சண்டை ஆரம்பித்துவிடும்..!!

டெக்னிக்கல் சிக்கல்களை தீர்த்து வைப்பது ப்ரியாவின் இன்னொரு விதமான பணி என்றேன் இல்லையா..?? அதில்தான் அசோக் ப்ரியாவை அதிகமாக காய விடுவான்..!! அவனுக்கு போரடித்தாலோ.. கொஞ்ச நேரம் ஓய்வு வேண்டும் என்று தோன்றினாலோ.. இல்லை வெறுமனே ப்ரியாவை சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ.. என்ன செய்வான் தெரியுமா..?? அவனே வேண்டுமென்றே டெக்னிக்கல் சிக்கல்களை உருவாக்குவான்.. ப்ரோக்ராமில் ஏதாவது சில்மிஷம் செய்து வைப்பான்.. சர்வரில் உள்ள ஏதாவது முக்கியமான ஃபைலை டெலீட் செய்வான்..!! ஒருநாள் இந்தமாதிரிதான் ஏடாகூடமாக ஒருவேலையை செய்துவைத்துவிட்டு..

"எதுவுமே வொர்க் ஆகல ப்ரியா.. வந்து என்னன்னு பாரு..!!"

என்று ப்ரியாவிடம் சென்று அப்பாவியாக சொன்னான். அவன் இந்த மாதிரி பிரச்னைகளை எடுத்துவந்தாலே பத்து பேதி மாத்திரைகளை மொத்தமாக முழுங்கியவள் போல கதிகலங்கிப் போய் விடுவாள் ப்ரியா.

"என்னடா ஆச்சு..?? நேத்துலாம் ஒழுங்காத்தான வொர்க் ஆகிட்டு இருந்தது..??" என்றாள் அடி வயிறு கலங்க.

"எங்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும்..?? நீதான டெக் லீட்..?? வந்து என்ன பிரச்னைன்னு பாரு..!!" என்று அழகாக கொக்கி போட்டான் அசோக்.

"ஹ்ம்ம்.. சரி வா.. பாக்குறேன்..!!" என்று வேறு வழியில்லாமல் அவன் தூண்டிலுக்கு வாயைக் கொடுத்தாள் ப்ரியா.

அசோக்கின் சிஸ்டத்தில் அமர்ந்து என்ன பிரச்னை என்று ப்ரியா ஆராய ஆரம்பித்தாள். அவளுக்கருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு அசோக் தன் மொபைலில் ஆங்ரி பேர்ட்ஸ் ஆட ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் ஆனது..!!

"என்ன ப்ராப்ளம்னே புரியலைடா..!!" ப்ரியா பரிதாபமாக சொன்னாள்.

"ப்ச்.. ஒரு டெக் லீட் இப்படிலாம் சொல்லப்படாது ப்ரியா.. பாரு பாரு.. சீக்கிரம் சால்வ் பண்ணு..!! இல்லனா இன்னைக்கு பூரா நான் ஐடிலாத்தான் உக்காந்திருக்கணும்..!!"

அசோக் கோவக்கார பறவையை குறி பார்த்து வீசிக்கொண்டே சொன்னான். பிரச்சினையின் மூலகாரணம் தெரியாமல் ப்ரியாவுக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. இங்கே ஆங்ரி பேர்ட்ஸில் அசோக்கின் ஸ்கோர் விறுவிறுவென பறந்தது. கொஞ்ச நேரம் அப்படி மொபைலில் விளையாடியவாறே ப்ரியா படும் அவஸ்தைகளை ஓரக்கண்ணால் ரசித்து சிரித்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்துகொண்டு,

"சரி ப்ரியா.. நான் போய் ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்.. அதுக்குள்ளே சால்வ் பண்ணி வை..!!" என்றான் கூலாக.

"ம்ம்.. சரிடா..!!" என்றாள் ப்ரியாவும் சீரியசாக.

வெளியே சென்று சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்து சீட்டுக்கு திரும்பினான். ப்ரியா இங்கே என்ன பிரச்னை என்றே கண்டுபிடிக்க முடியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தாள். அரை மணி நேரத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அசோக் திரும்பியதும்,

"இன்னும் சால்வ் பண்ணலடா.. என்ன ரூட் காஸ்னே கண்டு பிடிக்க முடியலை..!!"

என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவளை பார்க்க பாவமாக இருந்தது. 'அச்சோ.. பாவம் புள்ளை..!!' என்று தோன்றியது. உடனே உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னான்.

"சரி.. எந்திரி..!! நீ உன் கேபினுக்கு போ.. நான் பாத்துக்குறேன்..!!"

"நீ எப்படி பாத்துப்ப..??"

"ப்ச்.. பாத்துக்குறேன்றன்ல.. விடு..!! நீ போய் உன் வேலையை பாரு..!!"

அசோக் அந்தமாதிரி கேஷுவலாக சொல்கிற தோரணையிலேயே ப்ரியாவுக்கு புரிந்து போனது. எல்லாம் அவனுடைய சில்மிஷம் என்பதை உடனே உணர்ந்து கொண்டாள். சுட்டுவிரலை அவனை நோக்கி நீட்டி ஆத்திரமாக சீறினாள்.

"வேணுன்னே நீதான இதெல்லாம் பண்ணின..??"

"ஹேய்.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..!!"

"ப்ச்.. நடிக்காத.. எனக்கு புரிஞ்சு போச்சு..!!"

கண்களை உருட்டி முறைக்கிற ப்ரியாவையே அசோக் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான்.

"சரி.. வேணுன்னேதான் பண்ணுனேன்.. அதுக்கு என்ன இப்போ..??" அசோக் எகத்தாளமாக சொல்ல, ப்ரியா மலைத்து போய் அவனை பார்த்தாள்.

"எப்படி கூலா சொல்றான் பாரு..?? எவ்வளவு திமிர் இருக்கணும் உனக்கு..?? என்னை பாத்தா உனக்கென்ன வெளையாட்டா இருக்கா..?? உனக்கு டைம் பாஸ் பண்ண நான்தான் கெடைச்சனா..?? வேலை தர்றியா எனக்கு.. நான் என்ன வெட்டியாவா உக்காந்திருக்கேன்..??" ப்ரியா உஷ்ணமாக வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கும்போதே.

"ஹேய்.. நான் உள்ள வந்தப்போ ஃபேஸ்புக்தான நோண்டிட்டு இருந்த..??" அசோக் அசராமல் பதிலடி கொடுத்தான். ப்ரியா திணறிப் போனாள்.

"அ..அது.. அது.." என்று பரிதாபமாக தடுமாறினாள்.

"வெட்டி வேலை பாத்துட்டு இருந்த..!! சரி.. உனக்கு டெக்னிக்கலா ஏதாவது கத்துக்கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்..!! தப்பா..??"

"நா..நான் ஒன்னும் ஃபேஸ்புக்லாம் நோண்டல..!!" ப்ரியாவுடைய குரலில் இருந்த வேகம் இப்போது சுத்தமாக அடங்கிப் போயிருந்தது.

"ப்ச்.. அதான் பாத்துட்டேன்னு சொல்றேன்.. அப்புறம் ஏன் நடிக்கிற..?? போ போ.. போய் குடுக்குற சம்பளத்துக்கு கொஞ்ச நேரமாவது வேலையை பாரு..!! உனக்குலாம் எப்படித்தான் திங்கிற சோறு செரிக்குதோ தெரியல..??"

"ஆமாமாம் இவர் ரொம்ப யோக்கியம்.. நமக்கு புத்தி சொல்றாரு..!!" கம்மலான குரலில் சொல்லிக்கொண்டே அந்த இடத்திலிருந்து நழுவினாள் ப்ரியா.

"ஒய்.. என்ன மொனங்கிட்டே போற..?? உன்னை விடலாம் இங்க யாரும் கொறைஞ்சு போயிடல..!! போ போ..!!"அவளுடைய முதுகை பார்த்து கத்தினான் அசோக்.

அவர்கள் இருவரும் மூன்றாவது விதமாக முட்டிக்கொள்வது... டெலிவரி டெட்லைனில்.. அதாவது கொடுத்த வேலையை முடித்துக் கொடுக்கிற காலக்கெடுவில்..!! இந்த விஷயத்தில் யாருடைய கை ஓங்கி இருக்கும் தெரியுமா..?? மேலே படியுங்கள்..!!

கவிதா அன்று ஊரில் இல்லை.. ஹரி காலையிலே இருந்தே 'தண்ணி.. தண்ணி..' என்று தார்ப்பாலைவனத்தில் விடப்பட்டவன் மாதிரி தவித்துக் கொண்டிருந்தான்.. அசோக்குடனும், கோவிந்துடனும் ஆபீஸ் கம்யுனிகேடரிலேயே கான்ஃபரன்ஸ் போட்டான்.. குடித்து கும்மாளமிட மூவரும் கூட்டுத்திட்டம் வகுத்தார்கள்..!! எந்த பாருக்கு செல்வது.. என்னென்ன மதுவகைகளை என்னென்ன மிக்ஸிங்குடன் ருசி பார்ப்பது.. சில்லி சிக்கனில் எந்த அளவுக்கு காரம் போட சொல்வது.. சர்வருக்கு எவ்வளவு டிப்ஸ் கொடுப்பது.. ட்ராஃபிக் போலீசிடம் சிக்காமல் எந்த ரூட்டில் வண்டியை வீட்டுக்கு விரட்டுவது.. என மொத்த திட்டமும் ரெடி..!!

ப்ரியா அன்றைய வேலைகளை முடித்து ஆபீஸில் இருந்து வீட்டுக்கு கிளம்பினாள். தோளில் பேக் மாட்டிக்கொண்டு, தனது அறையை விட்டு வெளியே வந்து கதவை சாத்தினாள். கதவை லாக் செய்ய அவள் சாவி திருகிக்கொண்டிருக்கும்போதே, இவர்கள் மூவரும் டிரிங்ஸ் ப்ளான் பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது.

உடனே அசோக் மீது அவளுக்கு ஒரு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'மவனே.. குடிக்கிறதுக்கா ப்ளான் போட்டுட்டு இருக்குற.. இரு.. இதோ வர்றேன்..' என்று மனதில் கருவிக் கொண்டாள். நேராக நடந்து அசோக்கின் இடத்தை அடைந்தாள். இவளை பார்த்ததும் மூவரும் அமைதியாயினர். அவரவர் இடத்தில் அமர்ந்தவாறே இவளை ஏறிட, இவள் நடுவில் நின்றவாறு மூவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி..

"அந்த பேஜினேஷன் இஷ்யூ ஃபிக்ஸ் பண்ணியாச்சா..??" என கூலாக கேட்டாள்.

"இ..இன்னும் இல்ல.. நாளைக்குத்தான் முடியும்..!!" அசோக் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

"ப்ச்.. இன்னைக்கு முடிக்கணும்னு சொல்லிருந்தேன்ல..??"

"நீ சொல்லிட்டா.. உடனே முடிஞ்சிடுமா..?? என்னை கேட்டா எஸ்டிமேஷன் போட்ட..??"

"எஸ்டிமேஷன் நான் போடலைப்பா... பாலா..!! எதா இருந்தாலும் அவர்ட்ட போய் கேளு..!!"

"என்ன நீ..?? சும்மா சும்மா.. எதுக்கெடுத்தாலும் அவர்ட்ட போய் கேளு அவர்ட்ட போய் கேளுன்னு சொல்ற..??" அசோக் எகிறினான்.

"பின்ன.. நீ எடக்கு மடக்கா பேசினா.. வேற என்ன சொல்றது..??" ப்ரியாவும் பதிலுக்கு எகிறினாள்.

"நான் என்ன எடக்கு மடக்கா பேசுனேன்..??"

"ஆமாம்.. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டியதை பத்து நாள் ஆகும்னு சொல்வ.. கேட்டுட்டு உக்காந்திருக்குறது நான் என்ன கேனைச்சியா..?? இனி எஸ்டிமேஷன்லாம் உன்கிட்ட கொடுக்குற மாதிரி இல்ல..!!"

"ஓஹோ..?? அப்போ நானும் நீங்க சொன்ன டேட்ல எதையும் முடிக்கிற மாதிரி இல்ல..!!"

"வெல்..!! முடிக்க வேணாம்.. 'என்னால முடிக்க முடியாது'ன்னு எனக்கு ஒரு மெயில் மட்டும் அனுப்பிச்சுட்டு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..!!"

ப்ரியா கூலாக சொன்ன தோரணையிலேயே அசோக் சற்று மிரண்டு போனான். 'என்னிடம் இருந்தே வார்த்தைகளை பிடுங்கி.. எனக்கே ஆப்பு வைக்க முயற்சிக்கிறாள்..' என்று உஷாரானான். கொஞ்சம் உதறலான குரலிலேயே சொன்னான்.

"எ..என்ன வெளயாடுறியா..?? அ..அதுலாம் என்னால முடியாது..!!"

"அப்போ முடிச்சுட்டு கெளம்பு..!!" ப்ரியா கிடுக்கிப்பிடி போடவும், அசோக் வேறு வழி இல்லாமல் இறங்கி வர வேண்டி இருந்தது.

"ப்ச்.. அது அல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சு ப்ரியா.. ஒரு சின்ன டவுட் இருக்கு.. கிரிஸ்டோஃபர்க்கு கால் பண்ணி கன்பார்ம் பண்ணிட்டா.. வேலை முடிஞ்சது..!!" கிரிஸ்டோஃபர் என்பது அமெரிக்காவில் இருக்கும் பிசினஸ் டீமில் ஒரு ஆள்.

"ஓ.. கால் பண்ணி கேக்குறதுல என்ன ப்ராப்ளம்..??"

"அவன் இன்னும் ஆபீஸ் வரலை.. பத்து மணி மேலதான் வருவான்..!!"

"ஓகே..!! வெயிட் பண்ணி பேசு..!!"

"ஹேய்.. நாங்க வெளில போக ப்ளான் பண்ணிருக்கோம்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? அந்த இஷ்யூ முடிச்சுட்டு கெளம்பு..!! எல்லாம் நாளைக்கு குடிச்சுக்கலாம்..!!" ப்ரியா கடுமையான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஹரி இடையில் புகுந்து..

"நாளைக்கு கவிதா வந்துடுவா ப்ரியா..!!" என்று பரிதாபமாக சொன்னான். இப்போது ப்ரியா திரும்பி ஹரியை முறைத்தாள்.

"உன் இஷ்யூ என்னாச்சு..?? நீ எப்போ முடிப்ப..??" என்று அவன் மீது பாய்ந்தாள்.

"ஹேய்.. நா..நாளைக்குத்தான முடிக்கிறதா கமிட் பண்ணிருந்தேன்..??" அவன் பதறிப்போய் சொன்னான்.

"ஹ்ம்ம்... ஓகே.. ஓகே..!!" என்று சாந்தமான ப்ரியா இப்போது கோவிந்திடம் திரும்பி,

"நீ கோட் செக்கின் பண்ணிட்டியா கோவிந்த்..??" என்று கேட்டாள் புன்னகையுடன்.

"ம்ம்.. ப..பண்ணிட்டேன்..!!" என்றான் அவனும் சற்றே மிரட்சியாய்.

"குட்..!! வேலை முடிஞ்சதுல.. வீட்டுக்கு கெளம்பு.. கெட்ட பசங்களோடலாம் சேராத..!! நாளைக்கு பாக்கலாம்.. பை கோவிந்த்..!!"

ப்ரியா கூலாக சொல்லிவிட்டு தனது பின்புறத்தை அசைத்து அசைத்து திமிராக நடந்து சென்றாள். அவள் செல்வதையே அசோக் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடய மனநிலை புரியாத ஹரி..

"என்ன மாப்ள.. உன் ஆளு உன்னையே இந்த ஏறு ஏறிட்டு போகுது..??" என்று கேலியாக கேட்டுவிட,

"த்தா.. அவளை இனிமே என் ஆளுன்னு சொன்ன.. செருப்பு பிஞ்சுடும் உனக்கு..!!" என்று அசோக் கோவத்தை அவனிடம் காட்டினான்.

"ம்க்கும்.. எங்கிட்ட மட்டும் நல்லா எகிறு.. அவகிட்ட அப்படியே பம்மு..!!" ஹரியின் கேலியில் இருந்த உண்மை அசோக்கை அடங்கி போக செய்தது.

"வேற என்ன பண்ண சொல்ற..?? பவரும் கண்ட்ரோலும் அவகிட்டல இருக்கு..??" என்றான் வெறுப்பாக.

"ஹ்ம்ம்.. எல்லாம் அந்த பக்கு மண்டையன் செஞ்ச வேலை மாப்ள.. இந்த மக்கு பீஸைலாம் பாஸ் ஆக்கி.. நம்மளலாம் லூஸாக்குறான்..!!" இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோவிந்த் இடையில் புகுந்து,

"அ..அப்போ இன்னைக்கு தண்ணி இல்லையா பாஸ்..??"

என்று பாவமாக கேட்டான். உடனே ஹரியும் அசோக்கும் மெல்ல தங்கள் தலையை திரும்பி, அவனை பார்த்து முறைத்தார்கள். ஹரிதான் அவனை பார்த்து காட்டமாக சொன்னான்.

"ஏண்டா.. உனக்கு கொஞ்சம் கூட சென்ஸே இல்லையா..?? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..?? மனசாட்சியே இல்லாம எப்படி உன்னால இப்படி பேச முடியுது..?? உன்னல்லாம்..."

ஹரி ஏன் அவ்வளவு டென்ஷனானான் என்று புரியாமல் அசோக்கும் கோவிந்தும் விழிக்க, ஹரி இப்போது அசோக்கின் பக்கமாய் திரும்பி, வருத்தமான குரலில் சொன்னான்.

"பாரு மாப்ள இவனை.. என்ன பேசுறான்னு..!! காலைல இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு ப்ளான் போட்ருக்கோம்.. கடைசி நேரத்துல நீ வர முடியலைன்றதுக்காக எல்லாத்தையும் கேன்ஸல் பண்றதா..?? எப்படி இவனால இப்படிலாம் நெனைக்க முடியுது..?? சனியன் புடிச்சவன்.. 'இன்னைக்கு தண்ணி இல்லையா'ன்னு அபசகுனம் புடிச்ச மாதிரி கேட்டுக்கிட்டு இருக்குறான்..??"

ஹரி பேச பேசவே அசோக்கிற்கு அவன் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அவனை அப்படியே எரித்துவிடுவது போல உஷ்ணமாக பார்த்தான். ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, பற்களை கடித்தவாறே சொன்னான்.

"த்தா.. ரெண்டு பெரும் என் கண்ணு முன்னாடியே நிக்காதீங்கடா.. நான் கொலைகாரன் ஆகுறதுக்குள்ள இங்க இருந்து ஓடிப் போயிடுங்க..!!"

சொல்லிவிட்டு தன் சிஸ்டம் பக்கமாய் திரும்பி, கீ போர்டை படபடவென தட்டினான். அசோக்கின் பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். ஆனால் அவன் மனதில் இருக்கும் கோபத்தின் அளவை இன்னும் அறிந்து கொள்ளாதவனாய்..

"என்ன மாப்ள.. இதுக்குபோய் இவ்ளோ டென்ஷன் ஆகுற..?? இப்போ என்ன.. உன்னால குடிக்க முடியலை.. அவ்ளோதான..?? கவலையை விடு.. உனக்கும் சேர்த்து நான் இன்னைக்கு குடிச்சுடுறேன்.. ஓகேவா..??"

கேட்டுவிட்டு ஹரி இளிக்க, அசோக் அதற்கு மேலும் தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டென திரும்பி ஹரியை சேரோடு எட்டி உதைத்தான். அவன் நிலை தடுமாறிப்போய் தனது டேபிள் மீது சரிந்து, மானிட்டரை கட்டிப் பிடித்துக் கொண்டான்.



அத்தியாயம் 11



அந்த வாரத்தில் ஒருநாள்.. அதிகாலைப்பனி சூழ்ந்த பெங்களூரில்.. குளிருக்கு நடுங்கிக்கொண்டே பஸ்ஸில் இருந்து குதித்தாள்.. செண்பக லக்ஷ்மி.. செல்வியின் தங்கை..!!!! அவள் பெங்களூர் வருவது அசோக்கிற்கு முன்பே தெரியாது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவன், காபிக்காக கிச்சனுக்கு தூக்க கலக்கத்துடனே நடந்து சென்றபோதுதான், டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லி விழுங்கிக்கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள். திடீரென அவளை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் ஆச்சரியத்தில் திகைத்த அசோக், அப்புறம்..

"ஹாய் செம்பு..!!" என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே. சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.

"ஹாய் மாமா..!!" என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு. சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.

"எப்போ வந்த..??"

"இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்..." அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.

"என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??"

அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள். அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,

"சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!"

என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும். அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள். டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.

"எப்போ வந்தா..??"

"இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!" செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.

"ஓஹோ..!!"

சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான். இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான். இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.

"வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??" அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.

"உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!"

"ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??"

"இன்டர்வ்யூக்கு..!!"

"ஓ..!! எந்த கம்பெனில..??"

"உங்க கம்பெனிலதான்..!!" செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

"எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??"

"ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??"

செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது. ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை. நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.

"நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??"

"யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??"

"ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு.." அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.

"வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??"

"ம்ம்ம்ம்..!!"

"அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!"

அசோக் இப்போது அமைதியானான். நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான். 'எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!' - இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான். இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.

"ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??" அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.

"ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. 'என் தங்கச்சியை கட்டிக்கிறியா'ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??"

"ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.??"

"பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??"

படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள். அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.

"மனசுக்குள்ள பெரிய மன்மதா ராசான்னு நெனைப்பு..!!"

"என்னது..?? என்ன சொன்னீங்க..??" அசோக் தன் வலது காதை அவள் பக்கமாய் திருப்பியவாறே கேட்க,

"ஆங்..??? காபி ஆறுறதுக்குள்ள அதை குடிச்சு தொலைடா கடன்காரான்னு சொன்னேன்..!!" செல்வி இப்போது அவன் காதே வலிக்கிற அளவுக்கு சத்தமாக சொன்னாள்.

அசோக் படக்கென காதை பொத்திக்கொண்டு, அண்ணியை ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் காபியை வாய் வைத்து உறிஞ்சியவாறே திரும்பி, தனது அறைக்கு நடந்தான். ந்யூஸ் பேப்பர் படித்துக்கொண்டே காபி அருந்தினான். பிறகு குளித்து முடித்து வெளியே வந்து.. ஆபீசுக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கையில்.. செல்வி அவனை அழைத்தவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள்.

"அசோக்கு..!!"

"ம்ம்.. என்ன அண்ணி..!!"

"நீ ஆபீஸ் போறப்போ.. அப்படியே அவளையும் பைக்ல கூட்டிட்டு போயிடுறியா..??" செல்வி இயல்பாக கேட்டாள்.

"ப்ச்.. என்ன வெளையாடுறீங்களா..?? அதுலாம் என்னால முடியாது.. ஆட்டோல போக சொல்லுங்க அவளை..!!" அசோக் வெறுப்பாக சொன்னான்.

"ஹேய்.. அவளுக்கு பெங்களூர் புதுசுடா.. தனியா போக பயப்படுறா..!! இன்னைக்கு ஒருநாள்தான.. கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!!"

செல்வியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. அசோக் சற்று தயங்கினான். அண்ணியின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தான். பிறகு 'ஒருநாள்தானே..?' என்று மனதில் தோன்றவும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டான்.

"சரி சரி.. கூட்டிட்டு போறேன்..!!"

"ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"இன்டர்வ்யூக்கு வர்றால.. உன் கம்பனி பத்தி கொஞ்சம் டீட்டெயில் கேக்கனும்னு சொன்னா..!!"

"ம்ம்.. ம்ம்.. எல்லாம் பைக்ல போறப்போ கேட்டுக்கலாம்னு சொல்லுங்க..!! ரெடியாயிட்டாளா அவ..??"

"அவ அப்போவே ரெடியாயிட்டா..!! நீ என்ன.. சாப்பிடலையா..??"

"இல்ல.. டைமாச்சு.. கெளம்புறேன்.. ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!"

அடுத்த ஐந்தாவது நிமிடம் அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜேஷ் அசோக்கை தனியாக அழைத்துச்சென்று கிசுகிசுப்பாக சொன்னான்.

"ஒன்னா பைக்ல போறது இருக்கட்டும் அசோக்.. ஆனா.. உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒரு கேப் எப்போவும் இருக்கணும்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??"

"ம்ம்.. புரியுது புரியுது.. அதுலாம் நீ சொல்லவே வேணாம்..!!" அசோக் இறுக்கமாகவே சொன்னான்.

வீட்டில் இருந்து கிளம்பிய இரண்டாவது நிமிடம், தெருமுனையில் இருக்கும் அந்த பெட்டிக்கடையில் இருவரும் நின்றிருந்தார்கள். அசோக் குபுகுபுவென புகை விட்டுக் கொண்டிருக்க, செண்பகம் அந்த புகை நாசியில் ஏறிவிடாமல் இருக்க துப்பட்டாவால் மூக்கை பொத்தியவாறு பரிதாபமாக நின்றிருந்தாள். அப்படியே அசோக்கை பார்த்து கேட்டாள்.

"நீங்க்க்.. தம்க்கக்ர்த்.. வீக்க்க்.. தெர்ப்ப்க்.."

அசோக் இப்போது உடனடியாய் டென்ஷன் ஆகிப் போனான்.

"அப்டியே அறைய போறேன் உன்னை..!! வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்குற.. சைனாக்காரனுக்கு ஜல்ப்பு புடிச்ச மாதிரி..!! கையை எடுத்துட்டு பேசுடி.. செம்பு..!!" என்று எரிச்சலாக சொன்னான்.

"கையை எடுத்தா.. மூக்குல ஸ்மோக் ஏறுது மாமா..!!"

"அப்படியா..?? மூக்குல ஒரு சைலன்சர் மாட்டிட்டா சரியா போயிடும்..!!"

"என்னது.. சைலன்சரா..??"

"அடச்சை.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு..!!"

"ம்ம்ம்.." சொல்லிக்கொண்டே செண்பகம் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

"ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்ன கேட்க வந்த..??"

"இல்ல.. நீங்க தம்மடிகிறது வீட்ல எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டேன்..??"

"ம்ம்.. ம்ம்.. எல்லாருக்கும் தெரியும்..!! அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி.. இவங்க நாலு பேருக்கு மட்டும் தெரியாது.. அவங்ககிட்ட மட்டும் சொல்லிடாத..!!" திருட்டு தம் அடிக்கிறேன் என்பதையே கெத்தாக சொன்னான் அசோக்.

"ம்க்கும்.. அப்புறம் வேற யார்கிட்ட போய் நான் இதை சொல்றது..?? தம்புகிட்டயா..??" செண்பகம் சலிப்பாக சொன்னாள்.

"அதுசரி.. அண்ணிகிட்ட ஏதோ.. என் கம்பனி பத்தி கேக்கனும்னு சொன்னியாமே..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"என்ன அது..??"

"அ..அது.. அது.." செண்பகம் சற்றே தயங்க,

"ம்ம்.. கேளு..!!" அசோக் அவளை தூண்டினான்.

"உ..உங்க கம்பனில.."

"ம்ம்.. எங்க கம்பனில..??"

"சாப்பாடுலாம் எப்படி..??" செண்பகம் கேட்டுவிட்டு பற்களை காட்ட, அசோக் அவளை கடுப்புடன் முறைத்தான்.

"எப்படின்னா...?? எனக்கு புரியலை..!!"

"இல்ல.. அங்க கேண்டீன் இருக்கா.. இல்ல நாமளே சாப்பாடு கொண்டு போகனுமா..??"

"ம்ம்..?? கேண்டீன் இருக்கு.. கேஃப்டீரியான்னு சொல்வாங்க..!!"

"ஓ..!! ம்ம்ம்.. நம்ம சாப்பாடு கெடைக்குமா.. இல்ல இந்த ஊர் சாப்பாடுதானா..??"

"எல்லா ஊர் சாப்பாடும் கெடைக்கும்..!! பதினஞ்சு இருபது ஸ்டால் இருக்கு..!!"

"ஹ்ம்ம்.. அப்புறம்...."

"வேறென்ன..??"

"இடியாப்பம் கெடைக்குமா அங்க..??" செண்பகம் விழிகளை விரித்து ஆர்வமாக கேட்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.

"ஏண்டி.. நீ சாஃப்ட்வேர் டெவலப் பண்ற வேலைக்கு வந்திருக்கிறியா..?? இல்ல.. சாப்ட்டு உடம்பை டெவலப் பண்ணலாம்னு வந்திருக்கியா..??"

"சாஃப்ட்வேர் வேலைக்குத்தான்.. ஏன்..??" செண்பகம் முகம் சுருங்கிப் போனவளாய் சொன்னாள்.

"கேக்குற கேள்விலாம் ஒன்னும் சரி இல்லையே..!! இன்டர்வ்யூல இந்த கேள்விலாம் கேட்பாங்கன்னு உனக்கு யார் சொன்னது..??"

"இன்டர்வ்யூக்குலாம் நல்லா ப்ரிப்பேர் ஆகிட்டேன் மாமா.. அதுலலாம் எந்த டவுட்டும் இல்ல..!!"

"இடியாப்பம் கெடைக்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் இன்னும் ப்ரிப்பேர் ஆகலையாக்கும்..??"

"ஹ்ம்ம்..!!" செண்பகம் அப்பாவியாக சொல்லிவிட்டு கட்டை விரல் நகத்தை பற்களால் கடித்தாள்.

"ம்ம்ம்.. இடியாப்பம்லாம் கெடைக்கும்.. போதுமா..??"

"ம்ம்ம்..!!" செண்பகத்தின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியும், பிரகாசமும்.

"அவ்வளவுதானா.. வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??" அசோக் சலிப்பாகவே கேட்டான்.

"ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.." என்று நெற்றியை தேய்த்தவாறு கொஞ்ச நேரம் யோசித்த செண்பகம், அப்புறம்

"ஆங்.. டைமிங்லாம் எப்படி..??" என்று கேட்டாள் பட்டென.

"டைமிங்லாம் ஒன்னும் கெடயாது.. எல்லா நேரமும் கேஃப்டீரியா தெறந்திருக்கும்.. நீ நெனச்ச நேரத்துக்கு போய் கொட்டிக்கலாம்..!!"

"ஐயோ.. நான் ஆபீஸ் டைமிங் கேட்டேன் மாமா..!!"

என்று அவசரமாய் சொன்னவள், 'ஹஹா.. ஹஹா.. ஹஹா..' என டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல லூசுத்தனமாய் சிரித்தாள். அசோக் அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தீர்ந்து போன சிகரெட்டை கீழே போட்டு ஷூ காலால் நசுக்கியவாறே..

"கெளம்பலாமா..??" என்றான் இறுக்கமான குரலில்.

இருவரும் மீண்டும் பைக்கில் கிளம்பினார்கள். மிதமான வேகத்தில் அசோக் பைக்கை செலுத்த, செண்பகம் ஒரு கையால் அவனுடைய தோளை பிடித்துக்கொண்டு சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வண்டி சில்க்போர்டை தாண்டி வலது பக்கம் திரும்பிய போது, அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

"என்ன..??" அசோக் பைக்கை செலுத்திக்கொண்டே கேட்டான்.

"ரெஸ்யூம் பிரிண்ட் அவுட் எடுக்கணும் மாமா.. ஏதாவது கடைல நிறுத்துங்க..!!"

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. இருவரும் அந்த புக் ஷாப்பில் இருந்தார்கள்..!! அசோக் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருக்க.. செண்பகம் எடுத்த பிரிண்ட் அவுட்டையும், ஜெராக்சையும் ஃபைலுக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்..!!

"முடிஞ்சதா..??" என்று கேட்ட அசோக்கிடம்,

"இவங்களுக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் ரூபீஸ் குடுங்க மாமா..!!"

"ஏன்.. உன்கிட்ட இல்லையா..??"

"எங்கிட்ட சேன்ச் இல்ல மாமா.. தவுசண்ட் ரூபீசா இருக்கு..!!"



அசோக் வேண்டா வெறுப்பாக பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். 'ஃபைவ் ரூபீஸ் சேன்ச் இல்லா..' என்ற கடைக்காரனிடம், 'பரவால.. சாக்லேட் எடுத்துக்குறேன்..!!' என்றுவிட்டு பாட்டில் திறந்து சாக்லேட் அள்ளிக்கொண்டாள். அதை அப்படியே தனது பேக்கில் போட்டு.. ஜிப்பை இழுத்து மூடியவள்.. தன்னையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கிடம் திரும்பி.. 'கெளம்பலாமா மாமா..??' என்றாள் புன்னகையுடன்.

மீண்டும் பைக் பயணம்..!! வண்டி எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பறந்துகொண்டிருந்தது. செண்பகம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே வர, அசோக் அசுவாரசியமாய் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். ஆபீஸ் வளாகத்தை நெருங்கும்போது செண்பகம் மீண்டும் அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.

"என்னடி...??" இப்போது அசோக்கின் குரல் சற்றே எரிச்சலாக ஒலித்தது.

"ஒரு சின்ன ரெக்வஸ்ட் மாமா..!!"

"என்ன..??"

"அங்க வந்து.. மத்தவங்க முன்னாடி.. என்னை செம்புன்னு கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..!! செண்பகம்னு கூப்பிடுங்க..!!"

அவள் கெஞ்சலாக சொல்ல, அசோக் இப்போது அவசரமாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, அவளை திரும்பி பார்த்தான். செண்பகம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.

"என்ன மாமா..??" என்றாள் குழப்பமாய்.

"எறங்குடி..!!" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.

"எதுக்கு..??"

"எறங்குன்னு சொல்றேன்ல.. எறங்கு..!!"

அசோக் கத்தவும் செண்பகம் பதறிப்போய் பைக்கில் இருந்து கீழே இறங்கிக் கொண்டாள். சிறிது தூரத்தில் தெரிந்த அவர்களது ஆபீஸ் வளாகத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டி அசோக் சொன்னான்.

"அந்தா தெரியுது பாரு.. அதுதான் எங்க ஆபீஸ்..!! இங்க இருந்து நடந்தே போ.. கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க.. உன் இன்டர்வ்யூ கால் லெட்டர் காட்டினா.. அவங்களே உன்னை கைட் பண்ணுவாங்க.. சரியா..?? 'உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்க வொர்க் பண்றாங்களா'ன்னு யாராவது உன்னை கேட்டாங்கன்னு வச்சுக்கோ.. தப்பி தவறி கூட என் பேரை சொல்லிடாத.. புரியுதா..??"

"ஏன்..??" செண்பகம் நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள்.

"ப்ச்.. கேள்விலாம் கேட்க கூடாது..!! சொல்லாத.. அவ்வளவுதான்..!!" அசோக் முறைப்பாக சொன்னான்.

"சரி.. சொல்லலை..!!"

"ஹ்ம்ம்.. குட்..!! நான் கெளம்பட்டுமா..??" கேட்டுவிட்டு அசோக் கிக்கரை உதைக்க போக,

"அப்போ நெக்ஸ்ட் எப்போ மீட் பண்றது..??" செண்பகம் அவசரமாய் கேட்டாள்.

"இன்டர்வ்யூ முடிஞ்சதும்.. இதே எடத்துல வந்து நின்னுட்டு கால் பண்ணு..!!"

"ஹையோ.. இன்டர்வ்யூ மூணு நாலு ரவுண்ட் இருக்கே.. ஈவினிங் ஆயிடுமே..!!"

"ஆகட்டும்.. என்ன இப்போ..??"

"இல்ல.. மதிய சாப்பாட்டுக்கு.. பணம்..!!"

"உன்கிட்ட இல்லையா..??"

"தவுசண்ட் ரூபீசா இருக்கு மாமா..!!"

செண்பகம் அப்பாவியாய் சொல்லிவிட்டு வழக்கம்போல கட்டை விரலை கடித்தாள். அசோக் அவளையே ஓரிரு வினாடிகள் எரிச்சலாய் பார்த்துவிட்டு, பாக்கெட் தடவி ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். வெறுப்புடனே கிக்கரை உதைத்து, ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.



அத்தியாயம் 12



அன்று மாலை ஐந்து மணி வாக்கில்.. அசோக்கின் மொபைலுக்கு செண்பகம் கால் செய்தாள்..!! ப்ரியா தந்திருந்த ஒரு வேலையை திருப்தி இல்லாமல் செய்துகொண்டிருந்த அசோக், ஏற்கனவே எரிச்சலில் இருந்தான்..!! அந்த எரிச்சலுடன்தான் கால் பிக் செய்து காதில் வைத்தான்..!!

"ம்ம்.. சொல்லு செம்பு..!!" என்றான் இறுக்கமாக.

"இன்டர்வ்யூ முடிஞ்சது மாமா..!!" செண்பகத்தின் குரலிலோ ஒரு உற்சாகம்.

"என்னாச்சு.. ஊத்திக்கிச்சா..??" அசோக் ஆசையாக கேட்டான்.

"இல்ல இல்ல.. வேலை கெடைச்சிடுச்சு..!!" அவள் இவன் ஆசைக்கு ஆப்பு வைத்தாள்.

"கிழிஞ்சது..!! இவனுகளுக்கு அறிவுன்றதே கெடயாது..!!" அசோக் இப்போது சலிப்பாக சொன்னான்.

"யாரை சொல்றீங்க..??"

"எங்க கம்பனிகாரனுகளுக்குத்தான்..!! ஏற்கனவே ஒரு தடவை.. அழகா இருக்குன்றதுக்காக ஒரு மக்கு பீஸுக்கு வேலைக்கு சேர்த்துத்தான்.. அது இப்போ அழிச்சாட்டியம் பண்ணிட்டு அலையுது..!! ஹ்ம்ம்.. திருந்தவே மாட்டேன்றானுக.. திரும்ப திரும்ப அதே தப்பு பண்றானுக..!!"

அசோக் செண்பகத்தை மக்கு என்று மறைமுகமாக கிண்டல் செய்தான். அது எல்லாம் அவள் மண்டைக்குள் ஏறவில்லை. ஆனால் அவன் சொன்னதில் இருந்த இன்னொரு விஷயத்தை மட்டும் ஷார்ப்பாக கவனித்தவளாய்..

"ஹை.. அப்போ நான் அழகா இருக்கேன்னு சொல்றீங்களா மாமா..??" என்றாள் அசட்டுத்தனமாய்.

"ம்க்கும்.. அதை மட்டும் கரெக்டா கவனி.. நீயும் திருந்தவே மாட்டடி..!! சரி.. எப்போ ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..??"

"கரண்ட் கம்பனில ஒன் மன்த் நோட்டீஸ் பீரியட் இருக்குன்னு சொன்னேன்.. அதான்.. ஒன் மன்த் கழிச்சு ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க..!!"

"ஹ்ம்ம்..எவ்ளோ தந்தாங்க..??"

"ஃபோர் பாயின்ட் டூ..!!"

"நல்ல பேக்கஜ்தான்..!! ம்ம்ம்.. என்ன பண்ணிட்டு இருக்குற இப்போ..??"

"நீங்க சொன்ன இடத்துல நிக்கிறேன் மாமா..!! கெளம்பி வர்றீங்களா..?"

"இங்க பாரு செம்பு.. மாமாக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்ப லேட் ஆகும்..!! நீ என்ன பண்ற.. அப்டியே ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு ஓடிப் போயிடுற..!! ஓகேவா..??" அசோக் கூலாக சொல்ல,

"எ..என்ன மாமா.. இ..இப்படி சொல்றீங்க..??" அடுத்த முனையில் செண்பகம் பதறினாள்.

"ஏன்.. என்னாச்சு..??"

"நான் எப்படி ஆட்டோல போறது..??"

"ஏன்.. போனா என்ன..??"

"எனக்கு கன்னடா தெரியாதே..!!"

"ஓ.. தெலுங்கு மட்டும் தெரியுமாக்கும்..?? எனக்குந்தான் கன்னடாலாம் தெரியாது..!!"

"ப்ச்.. வெளையாடாதீங்க மாமா..!! எங்கிட்ட ஆட்டோக்கு குடுக்குறதுக்கு சேன்ச் கூட இல்லல.. தவுசண்ட் ருபீசா இருக்குது..!! ப்ளீஸ் மாமா.. நீங்களே வந்து வீட்டுல விட்டுடுங்க.. எனக்கு பயமா இருக்கு மாமா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!"

இன்னும் சிறிது நேரம் விட்டிருந்தால், செண்பகம் அழுதே இருப்பாள். அந்த அளவிற்கு உடைந்து போன குரலில் அசோக்கிடம் கெஞ்சினாள். அவளுடைய கெஞ்சலை அசோக் சிறிது நேரம் தலையை சொறிந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தான். அப்புறம்..

"ஏய்.. ஏய்.. ச்சீய்.. அழாத..!! நானே கொண்டுபோய் விட்டுத் தொலைக்கிறேன்.. அங்கேயே நில்லு.. இதோ வந்துடறேன்..!!" என்று வேண்டா வெறுப்பாக சொன்னான்.

"ஹ்ம்ம்.. தேங்க்ஸ் மாமா..!!"

செண்பகம் நிம்மதியாக சொன்னாள். காலை கட் செய்து பேகில் போட்டுக்கொண்டாள். தனியாக நின்றவாறு அங்கும் இங்கும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, ஒரு பத்து நிமிடத்திற்கெல்லாம் அந்த பைக் சரக்கென்று வந்து நின்றது. வந்ததுமே செண்பகத்தின் மீது எரிந்து விழுந்தான் அசோக்.

"அனகோண்டா சைசுக்கு இருக்குற.. ஆட்டோல போக பயமா இருக்குன்னு அழற..!! உனக்குலாம் வேலை குடுத்திருக்கானுக பாரு..?? எந்த மக்குப்பையன்டி உன்னை இன்டர்வ்யூ பண்ணினது..??"

"ஹாஹா.. பையன் இல்ல மாமா.. பொண்ணு..!!" செண்பகம் சொல்லிவிட்டு பற்களை காட்டி இளித்தாள்.

"சரி.. மக்குப்பொண்ணு..!!"

"ஐயோ.. பாவம் மாமா அவங்க.. திட்டாதிங்க..!!"

"ம்க்கும்.. உனக்குலாம் வேலை குடுத்திருக்காங்கன்னு சப்போர்ட்டா..?? அவங்க என்ன பாவம்.. உனக்கு சம்பளம் குடுக்கப்போற கம்பனிதான் பாவம்..!! ம்ம்ம்ம்.. அதுசரி.. எந்த டீம்ல ஜாயின் பண்ணப்போறேன்னு ஏதாச்சும் சொன்னாங்களா..??"

"ஆங்.. சொன்னாங்க.. ஏதோ.. யூ.பி.ஸி டீமாம்..!!"

செண்பகம் கேஷுவலாக சொல்ல.. அவள் சொன்ன வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில்.. அசோக் புரை ஏறியவன் மாதிரி 'ஹக்.. ஹக்.. ஹக்..' என்று இருமினான்..!! தலையை தட்டிக்கொண்டான்..!! மிரட்சியாய் செண்பகத்தை பார்த்தான்..!!

"என்னாச்சு மாமா..??" செண்பகம் பதறிப்போய் கேட்டாள்.

"ஹேய்.. அது எங்க டீம்டி..!!" அசோக் கத்தினான்.

"ஓ.. அப்படியா..?? அப்போ.. உங்களுக்கு ப்ரியா அக்காவை தெரியுமா..??" செண்பகம் அடுத்த குண்டை தூக்கி போட, அசோக் மேலும் அதிர்ந்தான்.

"என்னடி சொல்ற..?? ப்ரியா உனக்கு அக்காவா..??"

"ஹ்ம்ம்.. அவங்கதான் மாமா எனக்கு ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினாங்க.. இன்னைக்கு என்னை டெக்னிக்கல் இன்டர்வ்யூ பண்ணினதும் அவங்கதான்..!!"

"ப்பா.. முடியலை..!! ப்ரியா எப்படி உனக்கு பழக்கம்..??"

"ஹையோ.. அவங்க எனக்கு பழக்கம் இல்ல மாமா.. அவங்க தம்பி கோகுல், என் காலேஜ் ஜூனியர்.. அவன்தான் எனக்கு பழக்கம்.. அக்கா அக்கான்னு ரொம்ப ப்ரியமா இருப்பான்..!! அவன்தான் என் அக்கா இப்போ டெக்லீட் ஆயிட்டாங்க.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னான்..!! அவன் மூலமாத்தான் ப்ரியா அக்காக்கு ரெஸ்யூம் அனுப்பினேன்..!! அவங்களே என்னை இன்டர்வ்யூ பண்ணி.. அவங்க டீம்ல ஜாயின் பண்ணிக்க சொல்லிட்டாங்க..!! இப்போத்தான் தெரியுது.. அது உங்க டீம்னு..!!"

செண்பகம் சொல்லிக்கொண்டே இருக்க, அசோக்கிற்கு தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. 'என்னடா நடக்குது இங்க..??' என்று தலையை சொறிந்து கொண்டான். 'ஒரு வெத்துவேட்டு இன்னொரு வெத்துவேட்டை இன்டர்வ்யூ பண்ணி.. வேலை வேற குடுத்திருக்கு.. வெளங்குன மாதிரிதான் இந்த கம்பனி..!!' என்று நினைத்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அந்த அதிர்ச்சியில் திளைத்திருந்த அசோக், அப்புறம் அதை சமாளித்துக்கொண்டு,

"சரி சரி.. வண்டில ஏறு.. கெளம்பலாம்..!!" என்றான்.

செண்பகம் ஏறி அமர்ந்து கொள்ள, அசோக் வண்டியை ஸ்டார்ட் செய்தான். சில்க் போர்ட் நோக்கி விரட்டினான். நடப்பதை எல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை. 'இப்படியும் கூட நடக்குமா..?' என்று ஒருவித ஆச்சரியத்தில் மூழ்கியவனாகவே பைக்கை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். வரும்போது அவனை கேள்வி கேட்டு இம்சை செய்த மாதிரியே இப்போதும் செண்பகம் அவன் காதுக்கருகே குனிந்து ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். அசோக்கும் எரிச்சலுடனே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.

"பேங்களூர்ல பேக்கரிலாம் நெறைய இருக்குதுல மாமா..??" என்றாள் திடீரென.

"ஹையோ.. பேங்களூர் பத்தி ஒரு பெரிய உண்மையை கண்டுபிடிச்சுட்டடி செம்பு.. புத்திசாலி..!! இவ்வளவு கடைல பேக்கரி மட்டும் கரெக்டா உன் கண்ணுல பட்டிருக்கு பாரு..!!"

"ப்ச்.. கிண்டல் பண்ணாதீங்க மாமா..!! நெறைய கண்ணுல பட்டது.. அதான் கேட்டேன்..!!"

"ஹ்ம்ம்.. நீ சொல்றது சரிதான்.. இங்க பேக்கரிலாம் ஜாஸ்தி.. பத்துக்கடைக்கு ஒரு பேக்கரி கண்டிப்பா இருக்கும்..!!"

அசோக் சொல்ல, செண்பகம் இப்போது அமைதியானாள். அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவள் எதுவும் பேசவில்லை. எதையோ தீவிரமாக யோசித்தாள். அசோக்கும் நிம்மதியாக பைக் ஓட்டிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய நிம்மதி நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. செண்பகம் அவன் முதுகை மீண்டும் சொறிய, அசோக் திரும்பாமலே எரிச்சலாக கேட்டான்.

"என்னடி..??"

"எனக்கு முட்டை பப்ஸ் சாப்பிடனும் போல இருக்கு மாமா..!!" செண்பகம் குழைந்துகொண்டே சொன்னாள்.

"முட்டை பப்ஸா..??" அசோக் டென்ஷன் ஆனான்.

"ஹ்ம்ம்.. ரொம்ப பசிக்குது..!! ஏதாவது பேக்கரில வண்டியை நிறுத்துங்களேன்.. ப்ளீஸ்..!!"

அசோக் மனதிற்குள்ளேயே 'ஐயோ.. ஐயோ.. ஐயோ..' என்று தலையில் அடித்துக் கொண்டான். ரோட்டில் அடுத்ததாக எதிர்ப்பட்ட பேக்கரி முன்பாக வண்டியை நிறுத்தினான். செண்பகம் ஆசையாக குதித்து கீழே இறங்கினாள். அசோக் சலிப்புடன் வண்டியை சாய்த்து ஸ்டாண்ட் போட்டான். இருவரும் அந்த பேக்கரிக்குள் நுழைந்தார்கள்.

"பண்ணி.. பண்ணி..!!" பேக்கரிக்காரன் அன்பாக அவர்களை வரவேற்றான்.

"என்ன மாமா.. பன்னின்றாங்க..??" செண்பகம் அசோக்கின் காதோரமாய் கேட்டாள்.

"ம்ம்..?? உன்னைத்தான் சொல்றாங்க..!! கொஞ்சமா தின்னுனா.. கேட்டாத்தான..??" அசோக் நக்கலாய் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.

சற்றே பெரிய சைஸ் பேக்கரி அது..!! உள்ளே கண்ணாடி பெட்டிகளில் இனிப்புகளும், காரங்களும் பளபளக்க.. வெளியே ஒரு ஜூஸ் ஸ்டால் போட்டிருந்தார்கள்..!! கடைக்கு உள்ளேயே ஒரு பக்கம் நெட்டுக்க.. நான்கு பேர் அமர்கிற மாதிரி டேபிள்கள் நான்கைந்து வரிசையாக இடப்பட்டிருந்தன..!! எல்லா டேபிள்களையும் இப்போது ஆட்கள் ஆக்ரமித்திருக்க, கடைசி டேபிளில் மட்டும் ஒரே ஒருவர் தனியாக அமர்ந்திருந்தார். குனிந்து ந்யூஸ் பேப்பர் வாசித்தவாறு, டேபிள் மீதிருந்த டீயை அவ்வப்போது எடுத்து உறிஞ்சினார். வயதானவர்.. வரதராஜன் என்பது அவர் பேர்..!!

அசோக்கும் செண்பகமும் அவர் அமர்ந்திருந்த டேபிளில்தான் எதிரே சென்று அமர்ந்தார்கள். இவர்கள் சென்று அமர்ந்ததும் வரதாராஜன் ஒருமுறை நிமிர்ந்து இவர்களை பார்த்தார். அப்புறம் மீண்டும் ந்யூஸ் பேப்பரில் மூழ்கினார். இவர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் சுவர் ஓரமாக அமர, செண்பகம் அவனுக்கு பக்கவாட்டில், அவனை நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்தாள். அவளுக்கும் சுவருக்கும் இடையில் சிக்கி நசுங்குவது மாதிரி ஒரு உணர்வு ஏற்பட, அசோக் கடுப்பானான். கிசுகிசுப்பான குரலில் அவளிடம் சொன்னான்.

"ஏய்.. கொஞ்சம் அந்தப்பக்கம் தள்ளி உக்காருடி.. குந்தானி..!!"

"இதுக்கு மேல எங்க தள்றது.. சீட்டு சின்னதா இருக்கு மாமா..!!"

செண்பகம் அசைய மறுத்தாள். அசோக் அவளை வெறுப்பாக முறைத்தான். வாய்க்குள் முணுமுணுத்தான்.

"அந்த சீட்டு சின்னதா இருக்கா..?? உன் சீட்டு பெருசா இருக்குன்னு சொல்லு..!!"

"என்னது.. என்ன சொன்னீங்க..??" அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் செண்பகம் கேட்க,

"ஒண்ணுல்ல விடு..!!" அசோக் சமாளித்தான்.

முட்டை பஃப்ஸ் என்று அழைத்து வந்திருந்தாலும்.. அதோடு சேர்த்து சமோசா, கேக், சான்ட்விச், பிஸ்கட் என்று இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாள் செண்பகம்..!! அசோக் ஒற்றை சமோசா வாங்கி கடிக்க, செண்பகம் டேபிள் மீது கொண்டு வந்து வைக்கப்பட்ட அனைத்து ஐட்டங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மேய்ந்து கொண்டிருந்தாள்.

வரதராஜன் டீயை முடித்துவிட்டு எழுந்தார். காசு கொடுத்துவிட்டு வெளியே நடந்தார். அவர் அந்தப்பக்கம் சென்றதுமே அசோக் இந்தப்பக்கம் செண்பகத்தின் புஜத்தை பற்றி திருகினான். அவள் வாயில் கேக்கோடு அலறினாள்.

"ஆஆஆஆ..!! என்ன மாமா..??"

"எதுக்க போய் உக்காருடி.. போ..!!"

"ஏன்..??"

"மூச்சு விட முடியல எனக்கு.. அப்டியே என்னை போட்டு அமுக்கிக்கிட்டு இருக்குற..!! போ அந்தப்பக்கம்..!!"

செண்பகம் கேக்கை கடித்துக்கொண்டே நகர்ந்து அந்தப்பக்கம் சென்றாள். வரதராஜன் அவ்வளவு நேரமாய் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்த வேகத்திலேயே.. அடியில் ஸ்ப்ரிங் வைத்திருந்த மாதிரி.. 'ஆஆஆஆ..' என்று அலறியவாறே துள்ளிக்கொண்டு எழுந்தாள்.

"ஏய்.. என்னாச்சு..??" அசோக் பதற்றமாய் கேட்டான்.

"குத்திடுச்சு மாமா..!!" செண்பகம் புட்டத்தை தடவிக்கொண்டே சொன்னாள்.

"எது குத்துச்சு..??"

அசோக் கேட்டுக்கொண்டிருக்க, செண்பகம் குனிந்து இருக்கையில் கிடந்த அந்த பேப்பர் பொட்டலத்தை கையில் எடுத்தாள். ஆர்வமாக பிரித்தாள்.

"என்னடி அது..??"

"ஏதோ தாலிச்சரடு மாமா..!!"

"எங்க.. குடு..!!"

அசோக் கையில் வாங்கிப் பார்த்தான். சற்றுமுன் தனக்கு எதிரே அமர்ந்திருந்தவர்தான் அதை தவறிப்போய் விட்டிருக்கவேண்டும் என்று நினைத்தான். உடனே படக்கென திரும்பிப் பார்த்தான். வாசலில் வரதராஜன் நின்றிருந்தார். அவருடைய முகத்தை சரியாக கவனிக்காவிட்டாலும், அவர் அணிந்திருந்த சட்டை நிறத்தை வைத்தே அசோக்கால் இங்கிருந்தே அவரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

"ஹேய் செம்பு.. அவர்தான் இதை விட்டுட்டு போயிருப்பார்னு நெனைக்கிறேன்..!!"

"ஹ்ம்ம்.. ஆமாம் மாமா.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!"

"இரு.. நான் அவர்ட்டயே கேட்டு.. இதை குடுத்திட்டு வர்றேன்..!!" அசோக் எழுந்து கொள்ள,

"சரி மாமா..!!" சன்னமான குரலில் சொன்ன செண்பகம், சமோசாவை கடிக்க குனிந்தாள்.

அசோக் சற்று பொறுமையாகவே நடந்து வெளியே வந்தான். ஆனால் வெளியே வந்ததும்தான் அவனது பொறுமையான நடை எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்துகொண்டான். வரதராஜன் அதற்குள்ளாகவே தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்திருந்தார். அசோக் உடனே பதற்றம் தொற்றிக்கொண்டவனாய்..

"ஹலோ.. ஸார்.." என்று கத்தினான்.

ஆனால் அந்த வார்த்தைகள் வந்து காதில் விழுவதற்கு முன்பே வரதராஜன் வண்டியை விரட்டியிருந்தார். 'இப்போது என்ன செய்வது..??' என்று அசோக் ஒரு சில வினாடிகள் எதுவும் புரியாமல் விழித்தான். 'இந்த பேக்கரி கடைக்காரனிடம் கொடுத்து.. உரியவரிடம் ஒப்படைக்க சொல்லலாமா..?' என்று யோசித்தான். அப்புறம் அந்த கடை முதலாளியின் முகத்தை பார்த்ததும், அவன் மீதிருந்த நம்பிக்கை போய் அந்த யோசனையை கைவிட்டான். திடீரென ஒரு யோசனை அவன் மனதில் உதித்தது. உடனே தன் பைக் மீது ஏறி அமர்ந்து கிக்கரை உதைத்தான்



வரதராஜன் மிதமான வேகத்திலேயே ஸ்கூட்டரை செலுத்திக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே அசோக்கால் அவரை விரட்டிப் பிடிக்க முடிந்தது. திடீரென குறுக்கே வண்டியை நிறுத்தி வழிமறித்த அசோக்கை வரதராஜன் சற்றே திகைப்பாக பார்த்தார். அசோக் பைக்குக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவரை நோக்கி நடந்து வந்தான்.

"எ..என்ன தம்பி..??" வரதராஜன் பதற்றமாக கேட்டார்.

"நீங்க.. அந்த பேக்கரில் டீ சாப்பிட்டீங்கல்ல..??"

"ம்ம்..ஆ..ஆமாம்..!! நீ..நீங்கதான எதுத்தாப்புல.. ஒரு பொண்ணோட..??"

"ஹ்ம்ம்.. நான்தான்..!!"

"எ..என்ன விஷயம் தம்பி..??"

"நீங்க அந்த பேக்கரில ஏதாவது பொருளை விட்டுட்டு வந்துட்டீங்களா..??"

"எ..என்ன சொல்றீங்க நீங்க..??" வரதராஜன் ஒருகணம் புரியாமல் விழிக்க,

"கொஞ்சம் காஸ்ட்லியான பொருள்.. அது என்னன்னு கரெக்டா சொல்லிட்டீங்கனா.. உங்கிட்ட குடுத்துடுவேன்..!!" அசோக் நிதானமாக சொன்னான்.

வரதராஜனுக்கு அப்புறமும் ஓரிரு வினாடிகள் எதுவும் புரியவில்லை. அப்புறந்தான் திடீரென ஞாபகம் வந்தவராய் தனது பேன்ட் பாக்கெட்டை அவசரமாக தடவிப் பார்த்தார். பார்த்தவர் பக்கென அதிர்ந்து போனவராய் அசோக்கை ஏறிட்டார்.

"தாலிச்சரடு.. என் சம்சாரத்தோட தாலிச்சரடு..!!"

என்றார் பதட்டமாக. அசோக் இப்போது அவரைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். தன் கைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த காகிதப் பொட்டலத்தை அவரிடம் நீட்டினான். வரதராஜன் படக்கென அதை வாங்கிக்கொண்டார். அவரசமாய் பிரித்து பார்த்தார். அந்த தாலிச்சரடை பார்த்ததும் அவருடைய கண்களில் ஓர் பிரகாசம். அந்த பொட்டலத்தை கைக்குள் வைத்து அழுத்திப் பற்றிக்கொண்டார். அப்படியே தனது மார்பின் இடது புறமாய் அதை வைத்துக் கொண்டார். விழிகளில் இப்போது நீர் அரும்ப அசோக்கை பார்த்து..

"ரொம்ப நன்றி தம்பி..!!!!" என்றார் நன்றிப்பெருக்குடன்.

"ஐயோ.. இதுக்கெதுக்குங்க நன்றிலாம்..?? உங்களுக்கு சொந்தமான பொருளை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்தேன்.. அவ்ளோதான..??"

"இல்ல தம்பி.. இந்தக்காலத்துல இதுக்கே ஒரு பெரிய நல்ல மனசு வேணும்..!! என் வாழ்நாள் முழுக்க உங்களை நான் மறக்க மாட்டேன்..!! ரொம்ப ரொம்ப நன்றி தம்பி..!!"

"பரவால ஸார்.. விடுங்க..!!"

வரதராஜன் இப்போது மீண்டும் தலையை குனிந்து அந்த தாலி சரடையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவருடைய விழிகள் ரெண்டும் அகலமாய் விரிந்து போயிருக்க, ஒருமாதிரி உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். சில வினாடிகள் அந்த மாதிரி அந்த தாலி சரடை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவர், அப்புறம் அசோக்கை ஏறிட்டு சொன்னார்.

"என் கல்யாணத்தப்ப.. ஒரு மஞ்சக்கயித்தைத்தான் என் சம்சாரம் கழுத்துல தாலின்னு கட்டுனேன் தம்பி..!! அவளுக்குன்னு நான் வாங்குன மொத தங்கம் இதுதான்.. மொத தங்கம் மட்டும் இல்ல.. கடைசி தங்கமும் இதுதான்..!! அவ போய் இப்போ இருபது வருஷம் ஆச்சு.. இத்தனை நாளா அவ ஞாபகமா இதை பொட்டிக்குள்லையே பத்திரமா வச்சிருந்தேன்.. இன்னைக்குத்தான் வெளில எடுத்தேன்..!! எடுத்த அன்னைக்கே.. தவறிப்போய்..!! நல்லவேளை.. அந்த ஆண்டவனா பாத்து உங்களை அனுப்பி வச்சிருக்கான்..!!" தழதழத்த குரலில் அவர் பேசியதில் அசோக் நெகிழ்ந்து போனான்.

"ஹ்ம்ம்.. இத்தனை நாளா ஞாபாகார்த்தமா வச்சிருந்ததை.. இப்போ வெளில எடுக்குற சூழ்நிலைன்னா..?? ஏதாச்சும் கஷ்டமா உங்களுக்கு..??" அசோக் கவலையாக கேட்க, வரதராஜன் இப்போது புன்னகைத்தார்.

"ஹஹா.. கஷ்டம்லாம் ஒன்னும் இல்ல தம்பி..!! என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கேன்.. இதை அழிச்சு அவளுக்கு ஏதாவது நகை செய்யலாம்னு வெளில எடுத்தேன்..!! ஏற்கனவே கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன்.. இருந்தாலும்.. இன்னும் ஒரு பத்து பவுன் இருந்தா நல்லதுன்னு தோணுச்சு.. அதான்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என்ன பண்றது தம்பி.. இந்தக்காலத்துல நல்ல மாப்பிள்ளை கெடைக்கனும்னா.. இந்த மாதிரி நெறைய நகை சேத்து வச்சுக்க வேண்டி இருக்கே..?? ஹாஹா..!!" வரதராஜன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் இப்போது புன்னகையுடன் அவரிடம் கேட்டான்.

"ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??"

"ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!"

"நெறைய நகை கேக்குறவன் நல்ல மாப்பிள்ளை இல்லைங்க.. உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதவன்தான் நல்ல மாப்பிளை..!!"

அசோக் சொன்ன வார்த்தைகளில் இருந்த கூர்மையில் வரதராஜன் ஒருகணம் திகைத்தார். அந்த வார்த்தைகளின் உள் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள முனைந்தார். அப்புறம் சற்றே மனத் தெளிவடைந்தவராய் அசோக்கை ஏறிட்டு, புன்னகையும் பெருமிதமுமாக பார்த்தார். அவனுடைய முதுகை இதமாக தடவி..

"புரியுது தம்பி..!! உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்..!!" என்றார்.

"சரி ஸார்..!! எனக்கு நேரம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!! மொதல்ல இந்த தாலிச்சரடை கொண்டு போய் வீட்ல பத்திரமா வைங்க..!! கவலைப்படாதீங்க.. உங்க பொண்ணுக்கு.. உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்காத.. நெஜமான நல்ல மாப்பிள்ளை கெடைப்பான்..!!"

சொல்லிவிட்டு அசோக் திரும்பி நடந்தான். தனது பைக்கில் ஏறி அமர்ந்தான். வண்டியை ஸ்டார்ட் செய்ய போகும்போதுதான், அவ்வளவு நேரமாய் தன் மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை வரதராஜனிடம் திரும்பி சொன்னான்.

"உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு ஸார் எனக்கு.. ஆனா.. எங்கன்னுதான் ஞாபகம் வரலை..!!"

"ஹாஹா.. அப்படியா..?? நான் உங்களை எங்கயும் பாத்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லயே..!!"

"ஹ்ம்ம்.. உங்களுக்கு சொந்த ஊர் மதுரைப்பக்கமா..??"

"இல்ல தம்பி.. கிருஷ்ணகிரி.. இங்க வந்து ரொம்ப வருஷம் ஆச்சு..!!"

"ஓ.. ஓகே ஓகே..!! சரி ஸார்.. பாக்கலாம்..!!"

அசோக் வண்டியை கிளப்பினான். ஒரு யு டர்ன் அடித்து திருப்பினான். 'எங்கே பார்த்திருக்கிறோம் இவரை..??' என்று சில வினாடிகள் யோசனையுடனே வண்டியை செலுத்தினான். அப்புறந்தான் பேக்கரியில் தனியாக விட்டு வந்த செண்பகம் ஞாபகத்துக்கு வந்தாள். உடனே ஆக்சிலரேட்டரை முறுக்கி வண்டியை ஸ்பீடாக விரட்டினான்.

வரதராஜனை அசோக் பார்த்திருக்கிறான். ப்ரியாவின் பர்சனல் ஃபோட்டோக்களை பார்வையிடுகையில் அதில் ஒரு ஃபோட்டோவில் அவரை பார்த்திருக்கிறான். ஆனால் அது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ. அதில் கருகருவென நிறைய இருந்த அவரது தலைமுடி, இப்போது வெளுத்துப் போய் வெகுவாக குறைந்து போயிருந்தது. அதனால்தான் அவனுடைய மனதுக்கு சரியாக அவர் பிடிபடவில்லை.

அசோக் பேக்கரியை அடைந்தபோது.. செண்பகம் முகமெல்லாம் வியர்த்து வடிந்து போய் பதற்றமாக காணப்பட்டாள்..!! படபடக்கும் இதயத்துடன் இவனை காணாமல் தவித்துக் கொண்டிருந்தவள்.. இவனை பார்த்ததுமே 'அப்பாடா..!!!' என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்..!! ஆனால்.. அடுத்த நொடியே அவன் மீது ஒரு கோவம் வந்து மனதுக்குள் குடியேற.. கையை மடக்கி அவனுடைய புஜத்தில் ஓங்கி குத்தினாள்..!!

"ஆஆஆ..!!" அசோக் கத்தினான்.

"எங்க போயிட்டீங்க.. என்னை தனியா விட்டுட்டு..!! நான் எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா..??"

"அவர் வண்டியை எடுத்துட்டு கெளம்பிட்டார்மா.. வெரட்டி புடிச்சு போய் குடுத்துட்டு வந்திருக்கேன்..!!"

"சொல்லிட்டு போறதுதான..??"

"சொல்றதுகுலாம் நேரம் இல்ல..!! ஒரு அஞ்சு நிமிஷந்தான.. அதுக்குள்ள இப்படி டர் ஆகிப்போய் உக்காந்திருக்குற..??"

"ஆமாம்.. நீங்க பாட்டுக்கு திடீர்னு காணாம போயிட்டீங்க.. பில்லுக்கு கூட பணம் குடுக்கலை..!!"

"அதான் தவுசண்ட் ருபீஸ் வச்சிருக்கேன்னு சொன்னியே.. அதை எடுத்து குடுக்குறதுதான..??" அசோக் கிண்டலாக கேட்க,

"அ..அது.. அது.. தவுசண்ட் ருபீஸ்க்கு இவன்கிட்ட சேன்ஜ் இருக்காதுல..??" செண்பகம் திக்கி திணறி சொன்னாள்.

"ப்ச்.. சேன்ஜ் இருக்காதுன்னு நீயா சொல்லிக்கிறதா..?? அவன்ட்ட குடுத்து பாத்தாத்தான தெரியும்..?? எடு அந்த தவுசண்ட் ருபீசை.. இவன்ட்ட சேன்ச் கேட்டுப் பாக்கலாம்..!!" சொல்லிக்கொண்டே அசோக் அவளுடைய கையில் இருந்த பர்ஸை பறிக்க,

"ஐயையோ.. இவன்ட்ட இருக்காது மாமா..!!" செண்பகம் பதறினாள்.

அசோக் அதற்குள்ளாகவே அவளுடைய பர்ஸை திறந்திருந்தான். பர்சுக்குள் பார்வையை வீசியவன் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான். உள்ளே ஒரு கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டும், சில சில்லறை காசுகளும், நிறைய காற்றும் மட்டுமே இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன. அதைப்பார்த்து நொந்துபோன அசோக், நிமிர்ந்து செண்பகத்தை ஏறிட்டு, அவளை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அவளோ கட்டைவிரலை பற்களுக்கு இடையில் வைத்து கடித்தவாறே அசடு வழிந்தாள். அசோக் அந்த பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவள் முகத்திற்கு முன்பாக ஆட்டிக்காட்டியவாறே கடுப்புடன் கேட்டான்.

"இதுதான் உங்க ஊர்ல தவுசண்ட் ருபீசா செம்பு..??"

"இ..இல்ல மாமா.. அந்த தவுசண்ட் ருபீஸ் இங்க இல்ல..!!" செண்பகம் ஏதோ சமாளிக்க முயன்றாள்.

"வேற எங்க இருக்கு..?? ஏ டி எம் மெஷினுக்குள்ளயா..??" அசோக் பற்களை கடித்தவாறே கேட்டான்.

"ஐயோ.. இல்ல மாமா.. வீட்ல இருக்கு.. எடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன்..!! அக்காதான்.. செலவெல்லாம் அசோக் மாமா பாத்துப்பாரு.. நீ.." செண்பகம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"வெறுங்கையை வீசிட்டு போன்னு சொன்னாங்களா..??"

"ஹ்ம்ம்..!!"

செண்பகம் சொல்லிவிட்டு கட்டைவிரலை கடிக்க, அசோக் நொந்து போனவனாய் தலையில் அடித்துக் கொண்டான்.

அத்தியாயம் 13

வந்த வேலை வெற்றிகரமாக முடிந்த திருப்தியில், அன்று இரவே செண்பகம் சென்னைக்கு கிளம்பினாள். அசோக்தான் அவளை மடிவாலா சென்று பஸ் ஏற்றிவிட்டு, வழியனுப்பி வைத்தான். அசோக்கும் செண்பகமும் மடிவாலாவில் ஒரு ப்ரைவேட் ட்ராவல்சில் நின்றுகொண்டிருந்தபோது, ப்ரியாவும் வரதராஜனும் அவர்கள் வீட்டில் அசோக்கைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று நடந்த சம்பவம் பற்றி மகளிடம் உரைத்த வரதராஜன், அசோக் பற்றி மிக பெருமையாக பேசினார். எல்லாம் கேட்ட ப்ரியா அதிசயித்துப் போனாள்.

"ச்ச.. இந்தக்காலத்துல கூட இந்த மாதிரிலாம்.. தன்மையான பசங்க இருக்காங்களா..?? ரொம்ப ஆச்சரியமா இருக்கு டாடி..!! க்ரேட் கேரக்டர்..!!!!" என்று அந்தப்பையன் அசோக் என்று தெரியாமல் அவனை புகழ்ந்தவள், அடுத்த நொடியே..

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எங்க டீம்லயும்தான் ஒன்னு இருக்குது.. சரியான தறுதலை..!!" என்று தெரிந்தே அவனை திட்டினாள்.

அசோக்கிற்கும் ப்ரியாவிற்குமான பிரச்சினை நாளொரு மோதலும், பொழுதொரு சண்டையுமாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. அவர்கள் சண்டையுடன் சேர்ந்து அவர்களுடைய டீம் டெவலப் செய்த மென்பொருளும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டது. செண்பகம் வந்து சென்ற இரண்டாவது நாள்.. முதல் கட்டமாக சில அடிப்படை அம்சங்கள் கொண்ட மென்பொருளை க்ளயண்டிற்கு டெலிவர் செய்தார்கள். க்ளையன்ட் நிர்ணயித்திருந்த காலக் கெடுவுக்குள்ளேயே அதை செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடைய கம்பெனி அதை பெரும் வெற்றியாக கொண்டாடியது. க்ளையன்ட் அந்த மென்பொருளின் தரத்தில் மகிழ்ந்து போய் அனுப்பிய வாழ்த்து செய்தி, அவர்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இரண்டு பேரை குறிப்பிட வேண்டும்.

முதல் காரணம் ப்ரியா..!! அசோக் அவளுடைய ஈகோவை தூண்டி விட்டிருந்ததில் அவள் ஒரு வேகம் கொண்டிருந்தாள். இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு வெறியில் இருந்தாள். அவள் ஆன்சைட் சென்றதால் கிடைத்த க்ளையன்ட் கம்பனி பிசினஸ் டீமின் அறிமுகம், ப்ராஜக்டை கையாள்வதில் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல் மிக இயல்பாக, அவர்களை இங்கிருந்து அவளால் அணுக முடிந்தது. அதே மாதிரி இங்கே டீமில் இருப்பவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் எனினும், வேலை விஷயத்தில் ரொம்பவே அக்ரஸிவாக நடந்து கொண்டாள். குவாலிட்டி, டெட்லைன் என்ற இரண்டு விஷயங்களிலும் மிக கடுமையாக நடந்து கொண்டாள். 'யு ஆர் டூயிங் எ குட் ஜாப் ப்ரியா..!!' என்று பாலகணேஷ் தனது கட்டை விரலை உயர்த்தி அவளை அடிக்கடி பாராட்டுவார்.

வெற்றிக்கு இரண்டாவது காரணம் வேறு யாரும் அல்ல.. அசோக்கேதான்..!! அவனுக்கு ப்ரோமோஷன் கிடைக்காதது அவனிடம் ஒரு கோவத்தை உண்டு பண்ணியிருந்தாலும், அந்த கோவத்தை அவன் வேலையில் காட்டவில்லை. எப்போதும் போலவே சின்ஸியராக வேலை பார்த்தான். அவனுடைய மாட்யூலை மேற்பார்வையிட்ட கிறிஸ்டோஃபர் 'இட்ஸ் ப்ரில்லியன்ட் மேன்..!!' என்று மனமுவந்து பாராட்டினான். ப்ரியா லீட் ஆனது அசோக்கிற்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், 'அவள் தோற்க வேண்டும்' என்று குறுக்கு புத்தியுடன் அவன் நடந்து கொள்ளவில்லை. டீம் ஸ்ப்ரிட் அவனை விட்டு விலகவில்லை. ப்ரியாவைத் தவிர மற்றவர்கள் உதவி என்று வருகையில், எப்போதும் போலவே புன்னகையுடன் உதவி செய்தான். வேலையை முடிக்க முடியாமல் மற்றவர்கள் திணறும்போது, கைகொடுத்தான்..!!

சுருக்கமாக சொல்லப்போனால்.. ப்ரியாவின் டீம் மேனேஜ்மன்ட் திறமையும்.. அசோக்கின் டெக்னிக்கல் அறிவுமே.. ப்ராஜக்டின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்ட வைத்தன..!!

டீமில் இருக்கும் அனைவரையும் பாராட்டி கம்பனி மேனேஜ்மென்ட் வாழ்த்து சொன்னது. ப்ரியாவுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாராட்டு..!! முதல் இன்னிங்ஸிலேயே செஞ்சுரி அடித்த திருப்தி ப்ரியாவிற்கு..!! ஆனால் வழக்கம்போல சிறுபிள்ளை மாதிரி அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கவில்லை.. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை..!! அசோக்கிடம் கற்றுக்கொண்ட பாடம், அவளிடம் ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்..!! அவ்வளவு சந்தோஷத்திலும் கால்கள் தரையில் பட நிற்பது ப்ரியாவிற்கு ஒரு புதுவித உணர்வை கொடுத்தது..!! பிடித்திருந்தது அவளுக்கு அந்த உணர்வு..!!

'"எல்லாம் டெவலப் பண்ணினது நாம.. இவளுக்கு மட்டும் ஓவர் பாராட்டு..!!"

என்று அசோக் ஹரியிடம் சொல்லி கிண்டல் செய்தது காதில் விழுந்தும், விழுந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை அவள். தலையை குனிந்தவாறே அவர்களை கடந்து சென்றாள். தனது அறைக்கு சென்று.. கண்ணாடி முன் நின்று.. தனிமையில்.. தன்னைத்தானே பார்த்து.. 'கலக்குறடி ப்ரியா..!!' என்று மட்டும் சொல்லிக்கொண்டாள்.

இரண்டாவது கட்ட டெவலப்மன்ட் வேலைகளை ஆரம்பித்தபோதுதான், க்ளயன்ட்டிடம் இருந்து ஒரு புதுவித இம்சை வந்தது..!! கடலை எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கும்போதே 'நல்லெண்ணைதான..?' என்று கேட்பார்கள் என்று சொன்னேன் அல்லவா..?? அது மாதிரியான இம்சை..!! ஒப்பந்தத்தில் இருந்த அவர்களது தேவைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்கள்.. புதிதாக சில அம்சங்களை சேர்க்க விரும்பினார்கள்..!! 'பார்வதி ஓமனக்குட்டன் பத்து பேரை பறந்து பறந்து அடிக்கிற மாதிரி ஒரு ஃபைட் இருந்தா நல்லா இருக்கும்' என்பது மாதிரி..!! ரெகயர்மன்ட் சேஞ்ச்..!!

க்ளையன்ட் ப்ரபோஸ் செய்த ரெகயர்மன்ட் சேஞ்ச் கொஞ்சம் கிரிட்டிகலான விஷயம்..!! இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்திருந்த மென்பொருளின் பல அம்சங்களை பாதிக்க கூடியது..!! கவனமாக கையாளப்பட வேண்டியது..!! க்ளையண்டின் யோசனையை இம்ப்ளிமன்ட் செய்வதற்கு முன்பான இம்பாக்ட் அனலைஸிசும்.. இம்ப்ளிமன்ட் செய்ய எந்தவிதமான அணுகுமுறையை பின்பற்றுவது என்பதை முடிவு செய்வதும்.. ப்ரியாவின் தலையில் வந்து விழுந்தது..!! திறமைக்கு சவாலான இந்த புதுவித வேலை ப்ரியாவை திணற வைத்தது..!! உதவிக்கு முதலில் அசோக்கிடம்தான் ஓடி வந்தாள்..!!

"ஹேய்.. இந்த இம்பாக்ட் அனலைஸிஸ்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.. ப்ளீஸ்..!!" ப்ரியா கெஞ்சலாக கேட்க,

"ஹ்ஹ.. என்ன.. உன் வேலையை என் தலைல கட்டப்பாக்குறியா..?? அடுத்தவங்க வேலையை பாக்குறதுக்கு.. எனக்கு என்ன எக்ஸ்ட்ரா சம்பளமா தர்றாங்க..??" அசோக் பிகு செய்தான்.

"ஏன்.. உனக்கு எக்ஸ்ட்ராத்தான தர்றாங்க..??"

"என்ன சொல்ற..??"

"ஆமாம்.. நான் டெக்லீட்னு பேர்தான்.. என்னை விட உனக்குத்தான ஸாலரி அதிகம்..??"

"அதுலாம் நீ சொல்லப்படாது..!! என்னதான் ஸாலரி அதிகமா இருந்தாலும்.. டெக்லீட்ன்ற அந்த கெத்து வருமா..?? எல்லாரையும் என்ன மெரட்டு மெரட்டுற..??"

"ப்ச்.. இதுல என்ன கெத்து இருக்குது..?? உனக்கு குடுத்த வேலையை நீ பாக்குற.. எனக்கு குடுத்த வேலையை நான் பாக்குறேன்..??"

"ஹ்ம்ம்.. நானும் அதைத்தான் சொல்றேன்..!! போ.. உனக்கு குடுத்த வேலையை நீயே பாரு.. என் வேலையை நான் பாக்குறேன்..!!" என்று கூலாக சொன்ன அசோக்,

"ஏற்கனவே ஹெல்ப் பண்ணதுக்கே நான் படுற பாடு பத்தாதா .." என்று வாய்க்குள் முனகினான்.

அவன் என்ன முனகினான் என்பதை ப்ரியாவால் தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால் என்ன சொல்லியிருப்பான் என்று ஓரளவு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்களை இடுக்கி அவனையே முறைத்துப் பார்த்தாள்.

"ஓகே.. நானே பாத்துக்குறேன்.. எனக்கு எவன் ஹெல்ப்பும் வேணாம்..!!"

ப்ரியா வீராப்பாக சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். 'ஹேய்.. ப்ரியா..' என்று அசோக் அழைத்ததை மதியாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

'எவன் ஹெல்ப்பும் வேணாம்..' என்று ப்ரியா அசோக்கிடம் சொல்லியிருந்தாலும், அவளால் தனியாக அந்த வேலையை முடிக்க இயலவில்லை. வேறு டீம்களை சார்ந்த டெக்லீட்ஸ் சில பேரிடம் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டிருந்தாள். அவர்களுடைய நட்பை இப்போது நாடினாள். இந்த மாதிரியான வேலையில் கவனமாக செய்ய வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பதை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டாள். அதில்லாமல் இவர்கள் ஏற்கனவே டெவலப் செய்த மென்பொருளைப் பற்றிய முழு அறிவும் அவளுக்கு தேவைப்பட்டது. வீட்டுக்கு சென்றும்.. இரவில் பலமணி நேரங்கள் தனியாக லேப்டாப் முன்பு அமர்ந்து.. அடுத்தவர்கள் எழுதிய கோடை அனலைஸ் செய்து அண்டர்ஸ்டாண்ட் செய்து கொண்டாள்..!!

அந்த ஆராய்ச்சி வேலையை முடிக்க அவளுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன. நான்கு நாட்களின் முடிவில்.. ஒரு அதிகாலை நேரத்திலேயே.. பெரிய அளவிலான ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ப்ரியா தனது அனலைசிஸ் பற்றியும், பின்பற்ற போகிற அப்ரோச் பற்றியும் எல்லோருக்கும் விளக்குவதற்காக ஒரு பிரசன்டேஷன் தயார் செய்திருந்தாள். அதை எல்லோருக்கும் அவள் விளக்கி சரியான அணுகுமுறை என்று சர்டிபிகேட் வாங்க வேண்டும்..!!

சற்றே பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் அது..!! ப்ரியாவால் லீட் செய்யப்படுகிற டெவலப்மன்ட் டீம் மட்டும் இல்லாமல்.. QA டீம்.. பிசினஸ் டீம்.. ஆர்க்கிடெக்ட்ஸ் டீம்.. அந்தந்த டீம்களின் மேனேஜர்ஸ்.. எல்லாவற்றிற்கும் தலையான பாலகணேஷ் என.. ஹாலில் எக்கச்சக்கமான பேர் இருந்தனர்..!! இதில்லாமல்.. யூ.எஸ்சில் இருந்து களயன்ட் கம்பனியின் சில முக்கியமான புள்ளிகளும்.. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக.. அந்த மீட்டிங் அட்டன்ட் செய்தனர்..!!

ப்ரியா ஒரு மணி நேரத்துக்கு அந்த பிரசண்டேஷன் கொடுத்தாள். தன்னுடைய ஆய்வை பற்றியும்.. க்ளயன்ட்டின் விருப்பத்தை செயல்படுத்த எளிமையான அணுகுமுறையாக தான் கருதுவதையும்.. தெளிவாக.. நிதானமாக.. அழகிய ஆங்கிலத்தில் எடுத்துரைத்தாள்..!! அனைவரும் அமைதியாகவும், கூர்மையாகவும் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்..!! அசோக் மட்டும் அசுவாரசியமாய் காட்சியளித்தான்..!!

பிரசண்டேஷன் முடிந்து.. 'எல்லோருக்கும் புரிந்ததா.. அனைவருக்கும் இதில் சம்மதம்தானா.. வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறாதா..??' என ப்ரியா உதட்டில் ஒரு புன்னகையுடன் ஃபார்மலாக கேட்ட போதுதான் அசோக்..

"ஐ கெஸ் தேர் இஸ் ஸம் ஃப்ளா இன் திஸ் அப்ரோச்..!!"

என்று குரல் கொடுத்துக்கொண்டே எழுந்தான்.. 'உங்கள் பாட்டில் பிழை இருக்கிறது..!!' என்று நக்கீரர் எழுந்த மாதிரி..!! அவன் அவ்வாறு எழுந்ததுமே ப்ரியாவிற்கு அடிவயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்தது.

"என்ன ஃப்ளா..??" என்று உதறலாக கேட்டாள்.

"லெட் மீ எக்ஸ்ப்ளயின்..!!"

என்றவாறு அசோக் மேடை மீது ஏறினான். ப்ரியா கலங்கிப் போனாள். ஹாலில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு காட்டி அவன் பக்கமாய் திரும்பினாள். மேடையில் நின்ற அசோக்கின் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவனுக்கு மட்டுமே கேட்க கூடிய குரலில் கெஞ்சலாக சொன்னாள்.

"ப்ளீஸ்டா அசோக்.. வேணாண்டா..!!"



அவளுடைய கெஞ்சலுக்கு பதிலாக அசோக் ஒரு வசீகர புன்னகையை மட்டுமே கொடுத்தான். கையில் ஒரு மார்க்கர் எடுத்துக்கொண்டு வொயிட் போர்டை நெருங்கினான். அவ்வளவு நேரம் ப்ரியா விளக்கியவற்றை சுருக்கமாக மீண்டும் சொன்னவன், அதில் தான் பிழையாக கருதும் விஷயத்திற்கு உடனடியாக வந்தான். அவன் எந்த விஷயத்தை குறிப்பிடுகிறான் என்று தெரிந்ததுமே, ப்ரியாவிற்கு அதில் தான் செய்திருக்கிற தவறும் பட்டென புரிந்து போனது.. அவளுடைய நெஞ்சுக்குழியை பக்கென எதுவோ கவ்வியது போல இருந்தது.. பதறிப்போனாள்..!!

"அசோக் ப்ளீஸ்.. வேணாண்டா.. எல்லாரும் இருக்காங்க.. என் மானத்தை வாங்கிடாத..!!"

என்று ரகசியமாக அவனிடம் இறைஞ்சினாள். அசோக் கண்டுகொள்ளவே இல்லை. தான் சொல்ல வந்ததை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் ப்ரியா சொன்னதை சரி என்றே கருதிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும், இப்போது அசோக்கின் பேச்சில் ஆர்வமாகி.. அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை உன்னிப்பாக காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ப்ரியா மட்டும் மிரண்டு போனவளாய், எல்லோரையும் பரிதாபமாக தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள். 'ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா..' என்று சன்னமான குரலில் அசோக்கை கெஞ்சிக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில்.. அசோக் தனது கெஞ்சலுக்கு காது கொடுப்பான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு போயிற்று..!! 'இன்னும் கொஞ்ச நேரம் விட்டால்.. இவன் எனது தவறை எல்லார் முன்பும் வெளிச்சம் போட்டு காட்டி விடுவான்.. ப்ரியாவின் திறமை இவ்வளவுதானா என்று எல்லோரும் என்னை கேலியாக பார்ப்பார்கள்.. இப்போது என்ன செய்வது..??' என்று அவசரமாக யோசித்தாள். அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அசோக் பேசிக்கொண்டிருக்கையிலேயே இடையில் புகுந்து,

"ஹேய்.. ஸாரி டூ இன்டரப்ட்.. ஆக்சுவல்லி.. வீ ஆர் ரன்னிங் அவுட் ஆஃப் டைம்.. ஷேல் வீ டேக் திஸ் ஆஃப்லைன்..??" (குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.. இந்த மீட்டிங்கிற்கான நேரம் முடிந்து விட்டது.. நாம் இதை தனியே பேசி தீர்வு காணலாமா..??)

என்று புன்னகை தவழும் முகத்துடன், ஸ்டைலான ஆங்கிலத்தில் எல்லோரையும் பார்த்து கேட்டாள். அவள் அவ்வாறு திடீரென கேட்டதும் அசோக் உட்பட அத்தனை பேரும் இப்போது அமைதியாயினர். எல்லா டீம்களின் மேனஜர்களும் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அனைவரும் கான்ஃபரன்ஸ் காலில் இருக்கும் க்ளையன்டின் விருப்பத்தை எதிர்பார்த்தார்கள். ஒரு சில வினாடிகள் யோசித்த க்ளையன்ட் டீமும் 'ஓகே..!!' என்று ஒருமனதாக கரகர குரலில் ஸ்பீக்கரில் சொல்ல.. ப்ரியா இப்போது கண்கள் மூடி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

ஓரிரு விநாடிகள்தான்..!! அப்புறம் படக்கென தலையை திருப்பி.. அசோக்கை ஒரு உஷ்ணப்பார்வை பார்த்தாள்..!! அவனோ உதட்டில் கசியும் அழகான ஒரு புன்னகையுடன் இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..!!

"வெல்டன் ப்ரியா.. கலக்குற போ..!!" என்று சன்னமாக சொன்னவாறே கையில் இருந்த மார்க்கரை ஓரமாக தூக்கிப் போட்டான்.

மீட்டிங் ஹாலில் இருந்த அனைவரும் கொத்து கொத்தாய் எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறினர். அனைவரும் ப்ரியாவை கடக்கையில் 'தேங்க்ஸ் ப்ரியா..' என்றனர். மேனேஜர்கள் 'குட் செஷன் ப்ரியா..' என்று பாராட்டினர். எல்லோருக்கும் ப்ரியா அழகாக ஒரு புன்னகையை பரிசளித்துக் கொண்டிருந்தாள். அசோக் மட்டும் அசையாமல் அங்கேயே நின்றிருந்தான்.

எல்லோரும் வெளியேறியதும், ப்ரியாவின் முகம் பட்டென இறுகிப் போனது. ஓரிரு வினாடிகள் அசோக்கை திரும்பி முறைத்தவள், அப்புறம் தனது லேப்டாப் நோக்கி விடுவிடுவென நடந்தாள். அதில் செருகியிருந்த நெட்வொர்க் கேபிள் எல்லாம் ஆத்திரமாக பிடுங்கி எறிந்தாள். கீ போர்டை கோபத்துடன் படபடவென தட்டினாள். அவளுடைய செய்கை அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. மெல்ல நடந்து அவளை நெருங்கியவன்..

"இப்போ என்னாச்சுன்னு இவ்ளோ டென்ஷன் ஆகுற..??" என்று கூலாக கேட்டான்.

"பேசாத..!! நெனச்சதை சாதிச்சுட்டல நீ..??" ப்ரியா சூடாக சொன்னாள்.

"ஹாஹா.. நான் என்ன நெனச்சேன்..??"

"எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்தனும்னு நெனச்ச.. இன்னைக்கு பண்ணிட்ட..!! இப்போ சந்தோஷம்தான.??"

"ப்ச்.. அதான் அழகா எஸ்கேப் ஆயிட்டியே.. அப்புறம் என்ன..?? அதில்லாம.. இதுல என்ன அசிங்கம் இருக்கு..??"

"ஓஹோ..?? வெளையாட்டா இருக்குல உனக்கு இது..?? ஒருநாள் உனக்கு இது நடந்தாத்தான் உனக்கு புரியும்..!! நான் அவ்வளவு கெஞ்சியும்.. உனக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கம் வரலைல..?? ஹ்ம்ம்.. பாத்துக்குறேன்.. எனக்கும் நேரம் வரும்.. அப்போ பாத்துக்குறேன்..!!"

அவளுடைய எச்சரிக்கை அசோக்கை எரிச்சலடைய செய்தது. கூலாக இருந்தவன் பட்டென டென்ஷன் ஆனான்.

"ஒய். என்ன மெரட்டுறியா..?? உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. அப்படி பண்றேன்னு நானும் பாக்குறேன்..!!"

என்று எகத்தாளமாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முறைப்பின் விளைவு அடுத்த நாளே வெளிப்பட்டது..!!

அந்த வார இறுதியில்.. அசோக்கின் கல்லூரி நண்பன் ஒருவனுடைய திருமணம் இருந்தது..!! அந்த திருமணத்திற்கு செல்வதற்காக இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று அசோக் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தான். ப்ரியாவும் அதை அப்ரூவ் செய்திருந்தாள்..!! அன்று காலையில் அசோக் ஆபீஸ் வந்து தனது மெயில் பாக்ஸ் திறந்து பார்த்தபோது அந்த அப்ரூவல் ப்ரியாவால் கேன்சல் செய்யப்பட்டிருந்தது..!! அந்த மெயில் பார்த்ததுமே அசோக்கிற்கு ப்ரியா மீது சுருக்கென்று கோவம் வந்தது..!! 'மேரேஜுக்கு சென்று.. பழைய நண்பர்களை எல்லாம் பார்த்து.. நான்கு நாட்கள் களிப்புடன் கழிக்கலாமே..' என்ற தனது திட்டத்திற்கு ஆபத்து வந்துவிட்டதே என்ற கோவம்..!! ப்ரியாவின் அறைக்குள் புகுந்து அவளுடன் சண்டையிட்டான்..!!

"இப்போ எதுக்கு தேவை இல்லாம என் லீவை கேன்சல் பண்ணின..??" என்று காட்டமாக கேட்டான்.

"தேவை இல்லாமலாம் ஒன்னும் பண்ணல.. அந்த என்ஹான்ஸ்மன்ட் உடனே முடிச்சு குடுக்கனும்னு க்ளையன்ட் கேட்டிருக்காங்க..!!" ப்ரியா பொறுமையாக பதில் சொன்னாள்.

"கேட்டா முடிச்சு குடு..!! அதுக்கு ஏன் என்னோட லீவை கேன்சல் பண்ணின..??"

"நீதான் அந்த என்ஹான்ஸ்மன்ட் பண்ணி முடிக்கணும்..!!" ப்ரியா சொல்ல, அசோக் அதிர்ந்தான்.

"என்ன வெளையாடுறியா..?? கோவிந்த்க்கு அந்த வேலையை குடுக்குற மாதிரிதான ப்ளான்..??"

"ஆமாம்.. அப்படித்தான் ப்ளான் பண்ணிருந்தோம்..!! நீ அன்னைக்கு மீட்டிங்ல வாய் வச்சுட்டு சும்மா இருந்திருந்தா.. அவனுக்குத்தான் போயிருக்கும்..!! அன்னைக்கு நீ பெரிய புடுங்கியாட்டம் பேசினல.. இப்போ இந்த என்ஹான்ஸ்மன்டை முடிக்க நீதான் சரியான ஆள்னு க்ளையன்ட் ஃபீல் பண்றாங்க..!!"

"க்ளையன்ட் ஃபீல் பண்றாங்களா..?? இல்ல.. இந்த வேலையை அசோக்குக்கு குடுக்கலாம்னு நீயா பேசி கன்வின்ஸ் பண்ணி.. அவங்களை அப்படி ஃபீல் பண்ண வச்சியா..??"

"ஏதோ ஒன்னு..!! எனக்கும் இந்த என்ஹான்ஸ்மன்ட்டோட க்ரிட்டிக்காலிட்டி இப்போத்தான் புரியுது..!! இதை பர்ஃபக்டா பண்ணி முடிக்க எனக்கும் உன்னை விட்டா வேற ஆள் இல்ல..!! சேலஞ்சிங்கான வேலை வேணும்னு சும்மா சும்மா வந்து குதிப்பியே.. திஸ் இஸ் யுவர் ஆப்பர்ச்சூனிட்டி.. யூஸ் பண்ணிக்கோ..!! நேத்ராவையும் ஹரியையும் சேர்த்துக்கோ.. ஒன் வீக்ல இதை முடிக்கணும்..!! இது முடிஞ்சாத்தான்.. நெக்ஸ்ட் ஃபேஸ் டெவலப்மன்ட் நாம ஸ்டார்ட் பண்ண முடியும்..!! ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சீரியஸ்னஸ்..!!"

"எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல..!! எனக்கு அப்ரூவ் பண்ணின லீவ்.. எனக்கு வேணும்..!!"

"ப்ச்.. சும்மா சின்னப்புள்ளையாட்டம் அடம் புடிக்காத..!! இந்த வேலையை முடிச்சு குடுத்துட்டு.. ரெண்டு நாளுக்கு பதிலா அஞ்சு நாள் கூட லீவ் எடுத்துக்கிட்டு என்ஜாய் பண்ணு..!! என்ன.. புரியுதா..??" ப்ரியாவின் பதிலில் அசோக் எரிச்சலானான்.

"என் ஃப்ரண்டோட மேரேஜ் நாளன்னிக்குடி.. அது முடிஞ்சப்புறம் நான் அஞ்சு நாள் லீவ் எடுத்து என்ன பண்றது..?? வீட்ல தனியா உக்காந்து.. என்னமாத்தான் வருது..??"

"ஃப்ரண்டோட மேரேஜ்தான.. அதுக்கு ஏன் இப்படி குதிக்கிற.. என்னவோ உன் மேரேஜ்க்கே லீவ் தராதது மாதிரி..??"

"என்ன இவ்ளோ கூலா சொல்ற..?? இப்படி எவன் மேரேஜ்ம் அட்டன்ட் பண்ணலைன்னா.. அப்புறம் என் மேரேஜ்க்கு எந்தப்பய வருவான்..?? நானும் பொண்ணும் ஐயரும் மட்டுந்தான் உக்காந்திருக்கணும்..!!"

அவ்வளவு காரசார விவாதத்திலும் அசோக்கின் அந்தப்பேச்சு ப்ரியாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். அந்த சிரிப்பில் அவளுடைய மனசு பட்டென லேசாகி போனது. அசோக்கிடம் எப்போதும் அவளுக்கு இருக்கும் நட்புணர்வு இன்ஸ்டண்டாய் அவளுக்கு திரும்பி வந்தது. ஆனால் அசோக் இன்னும் சீரியசாகத்தான் தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவளாய்..

"ஹாஹா.. உனக்கு மேரேஜ்லாம் நடக்கும்னு வேற உனக்கு ஆசை இருக்கா..?? உன்னல்லாம் எவ கட்டிப்பா..??"

என்று கிண்டலாக சொல்லிவிட்டாள். சொல்லிவிட்டு அசோக்கின் முகத்தை ஏறிட்டாள். அவன் முகம் இன்னும் இறுகிப் போய், தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும்தான் 'தவறாக பேசிவிட்டோமோ' என்ற நினைவு அவளுக்கு தாமதமாக வந்தது. முகத்தை உடனடியாய் சீரியசாக மாற்றிக்கொண்டு..

"ஹேய்.. ஸாரி அசோக்.. நான் ஏதோ வெளையாட்டுக்கு.." அவள் வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

"பேசாத.. என்னை எவ்வளவு கேவலமா நெனச்சுட்ட நீ..?? எவளும் என்னை கட்டிக்க மாட்டாளா..??" அசோக் சீற்றமாக சொன்னான்.

"ஹேய்.. நான் வெளையாட்டுக்கு சொன்னேன்.. நாம இந்த மாதிரி சொல்லி அடிக்கடி கிண்டல் பண்ணிக்கிறதுதான..??"

"இத்தனை நாளா சொன்னது வேணா வெளையாட்டா இருக்கலாம்.. ஆனா இன்னைக்கு நீ சொன்னது அப்படி இல்ல..!! என்னை ஹர்ட் பண்ணனும்னேதான் சொல்லிருக்குற..!!"

"ப்ச்.. இல்லடா.. நான்தான் சொல்றேன்ல..??" ப்ரியா இப்போது கெஞ்சலாக சொன்னாள்.

"காட்டுறேன்.. நீ நெனைக்கிற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லன்னு காட்டுறேன்..!!"

அசோக் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை அவசரமாய் எடுத்தான். ராஜேஷின் நம்பருக்கு கால் செய்தான். அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் ப்ரியா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜேஷ் காலை பிக் செய்து ஹலோ சொல்வதற்கு முன்பே..

"ஏய்.. எனக்கு அர்ஜண்டா ஒரு பொண்ணு வேணும்..!!" என்றான் அசோக் அவசரமாய்.

"டேய்.. நான் ராஜேஷ்டா.. உன் அண்ணன்..!!" அடுத்த முனையில் ராஜேஷ் பதறினான்.

"ஆமாம்.. அதுக்கு என்ன..??" அசோக் புரியாமல் கேட்டான்.

"இல்ல.. திடீர்னு கால் பண்ணி அர்ஜண்டா பொண்ணு வேணும்னு சொல்றியே.. அதான்.. வேற யாருக்கும் பண்ண வேண்டிய காலை எனக்கு பண்ணிட்டியோன்னு..!!"

"அடச்சை..!! நான் கல்யாணம் செஞ்சுக்குறதுக்கு சொன்னேன்டா..!!" அசோக் ராஜேஷிடம் சொல்ல, ப்ரியா இப்போது அசோக்கை உஷ்ணமாக முறைத்தாள்.

"அதான்.. நீயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டியே..??"

"ஆமாம்.. அப்படித்தான் சொன்னேன்.. ஆனா நான் பாத்தது ஒன்னும் சரி இல்ல.. எல்லாம் திமிர் புடிச்சவளுகளா இருக்காளுக..!!" அசோக் ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னான்.

"ஓஹோ..!!"

"நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.. கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு பொண்ணு பாக்குற..!! நீ யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும்.. நான் அவ கழுத்துல தாலி கட்டுறேன்.. அது யாரா இருந்தாலும் சரிதான்..!! எல்லாம் உன் இஷ்டந்தான்.. புரியுதா..??"

"சரிடா சரிடா.. புரியுது..!! நான் பாத்துக்குறேன்.. விடு..!!"

அசோக் காலை கட் செய்தான். ப்ரியாவை ஏறிட்டு எகத்தாளமாய் ஒரு பார்வை பார்த்தான். ப்ரியா அசோக் மீது எழுந்த கோவத்தில்.. வேகவேகமாக மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் விம்மி விம்மி சுருங்க.. இவனையே முறைத்து பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தாள்..!! ஒரு சில வினாடிகள் இருவரும் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க.. அப்புறம் அசோக் 'ஹ்ம்ம்..' என்று சலிப்பாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். ப்ரியா அவன் போவதையே ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம்.. அங்கே அசோக்கின் வீட்டில்.. ராஜேஷ் தலையை சொறிந்தவாறு அமர்ந்திருந்தான்..!! தம்பி சொன்ன வார்த்தைகளை நம்புவதற்கு.. அவனுக்கு நிறைய நேரம் பிடித்தது..!! ஒரு வழியாய் நம்பிக்கை வந்ததும்.. என்ன செய்யலாம் என்று யோசித்தான்..!! 'உடனே வேண்டும் என்று வேறு சொல்கிறானே.. இப்போதுதான் அவனுக்கு நான் அண்ணன் என்ற மரியாதையே வந்திருகிறது.. இந்த வாய்ப்பை விடக்கூடாது.. உடனடியாய் இவனை அமுக்கிப் போட வேண்டும்..' என்று நினைத்தவன், கையிலிருந்த செல்போனை எடுத்து காண்டாக்ட் லிஸ்டில், அவன் எப்போதோ ஸேவ் செய்து வைத்திருந்த ஒரு நம்பரை இப்போது தேடினான். தேடிய நம்பர் கிடைத்ததும் கால் செய்து காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படும் வரை காத்திருந்தான். பிக்கப் செய்யப்பட்டதும்..

"ஹலோ.. மிஸ்டர் வரதராஜன்..??" என்றான்.

 

1 comment:

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...